மர்வான் பர்கூத்தி சவால் விட்டால் அப்பாஸ் பலஸ்தீனத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடுமா?

டொனால்ட் டிரம்ப்பின் அரசால் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளெதிலும் பங்கெடுக்க மாட்டோமென்று ஒதுங்கியிருந்தது பாலஸ்தீன அரசு. ஜோ பைடனின் வருகையால் மீண்டும் இஸ்ராயேலுடனான அமைதியை வேண்டிப் பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாராயிருக்கும் பாலஸ்தீன அதிகாரம் தமது பிராந்தியங்களில் தேர்தல் நடாத்தவேண்டுமென்ற கோரிக்கை சர்வதேசத்தின் பக்கத்திலிருந்து வைக்கப்பட்டது.

அல் பத்தா, ஹமாஸ் என்று முறையே பாலஸ்தீனத்தின் இரண்டு பகுதிகளைப் பிரித்து மோதிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அதனால் தமது பிராந்தியங்களில் தேர்தலை நடத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் பலமாக ஆட்சியிலிருக்கும் தமது எதிரியான ஹமாஸுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் ஜனநாயகத் தேர்தல்களை நடாத்த அறிவித்திருக்கிறது. மே 22 ம் திகதி பாராளுமன்றத் தேர்தலும் ஜூலை 31 ம் திகதி ஜனாதிபதித் தேர்தலும் நடாத்துவதாக எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளால்  ஏற்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் முடிவுசெய்யப்பட்டது.

சர்வதேசத்தால் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் இயக்கம் தேர்தலில் அப்பாஸின் அல் – பத்தா அமைப்பை எதிர்க்காமல் அவர்களுடன் இணைந்து தேர்தலில் பங்குபற்றுவது என்பதே திட்டம். தேர்தல், ஹமாஸ் – அல் பத்தா ஒன்றிணைப்பின்றி பாலஸ்தீனர்களின் பேச்சுவார்த்தைகள் எதுவுமில்லை என்ற நிலையில் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டு அப்பாஸே மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மர்வான் பர்கூத்தி என்ற இஸ்ராயேல் சிறையிலிருக்கும் பிரபலம் பெற்ற ஒரு 61 வயதான தலைவர், 85 வயதான அப்பாஸுக்கு எதிராக ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடலாம் என்று ஒரு கதை அடிபட ஆரம்பிக்கிறது. பாலஸ்தீன மண்டேலா என்று குறிப்பிடப்படும் பர்கூத்தி இஸ்ராயேலால் பல தடவை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலிருந்தே போட்டியிட்டு அப்பாஸையும், ஹமாஸ் இயக்கத்தையும் ஒரேயடியாக வெல்லக்கூடிய செல்வாக்குள்ளவர் என்று கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அதைத் தவிர நஸார் அல் -கத்வா என்ற அல் – பத்தா மத்திய குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்த மேலுமொருவர் அவ்வியக்கத்திலிருந்து விலகி அப்பாஸுக்கு எதிராகத் மேலுமொரு அமைப்பின் மூலமாகப் போட்டியிட வேட்பாளர்களை நியமிக்கப்போவதாகக் கடந்த வாரம் அறிவித்திருக்கிறார். அவரது வேட்பாளராகவும் அவர் பர்கூத்தியை ஜனாதிபதி இடத்துக்குப் போட்டியிட வைக்கலாம் என்று  விரும்புகிறார். ஆனால், அதை பர்கூத்தி ஏற்பாரா அல்லது தனியாக வேறொரு அமைப்பில் அப்பாஸுக்கு எதிராக மோதுவாரா என்று தெரியவில்லை. 

சிறையிலிருக்கும் பர்கூத்தியிடம் தூதுவர்களை அனுப்பிப் போட்டியிலிறங்க வேண்டாம், ஒற்றுமையாக அப்பாஸின் தலைமையில் இயங்கவேண்டுமென்று அப்பாஸ் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. அத்துடன் பர்கூத்தி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்தால் அப்பாஸ் ஏதாவது சாட்டுச் சொல்லி அத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடும் என்றும் வதந்திகள் பரவுகின்றன.

எக்காரணம் கொண்டும் தேர்தல்கள் நிறுத்தப்படமாட்டாது என்று அப்பாஸின் காரியாலயம் அறிவித்திருந்தாலும் தேர்தல் நாள் நெருங்க நெருங்க பாலஸ்தீனத் தலைமைக்குள் பல இழுபறிகள் ஏற்படலாம் என்று தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *