கொரோனாக் கட்டுப்பாடுகளால் வீட்டிலடைக்கப்பட்டிருந்தவர்களால் செழித்த நிறுவனங்களிலொன்றாக லேகோ.

உலகின் பல நாடுகளிலும் வியாபார ஸ்தலங்கள் மூடியிருந்த வேளையிலும் டனிஷ் விளையாட்டுப் பொருட்கள் நிறுவனமான லேகோ 2020 இல் ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான விற்பனையை எட்டியிருக்கிறது. அந்த விற்பனையானது நிறுவனத்தின் வருடாந்திர விற்பனைகளில் அதியுயர்ந்ததாகும்.

லேகோ நிறுவனத்தின் உரிமையாளரான ஷெல்ட் கிர்க் கிரிஸ்டன்ஸனும் அவருடைய மூன்று பிள்ளைகளும் டென்மார்க்கின் மிகப்பெரும் பணக்காரர்களாகும். அவர்களுடைய மொத்தச் சொத்தின் பெறுமதி 2019 இல் சுமார் 42 பில்லியன் டொலர்களாகும்.

2020 இல் லேகோ நிறுவனத்தின் விற்பனை 13 % அதிகரித்தது. அதன் மூலம் இலாபம் சுமார் 1.5 பில்லியன் டொலர்களாகும்.

எதிர்பாராத இந்த விற்பனை அதிகரிப்புக்கும், இலாப அதிகரிப்புக்கும் காரணம் கடந்த மூன்று வருடங்களாகவே தாம் லேகோவின் டிஜிடல் சேவைகளைச் சீர்செய்வதில் முதலீடுகள் செய்தமையாகும் என்றும் லேகோ விளையாட்டுப் பொருட்கள் காலத்தால் அழியாதவையாக இருப்பதுமாகும் என்று நில்ஸ் B. கிரிஸ்டன்சன் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 

லேகோவின் இணையத்தளத்தைப் பாவித்தவர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 200 விகிதத்தால் அதிகரித்தது. அதே சமயம் உலகின் பல பாகங்களிலும் லேகோ புதிய கடைகளையும் திறந்தது. கடந்த வருடங்களில் மட்டும் 134 லேகோ கடைகளைத் திறந்ததன் மூலம் தற்போது 678 கடைகளை உலகம் முழுவதும் கொண்டிருக்கிறது லேகோ. 2021 இல் மேலும் 121 கடைகள் திறக்கப்படவிருக்கின்றன.

ஆசிய நாடுகள், முக்கியமாகச் சீனா, தங்களுடைய பெரும் விற்பனை அதிகரிப்புக்குக் காரணம் என்கிறது லேகோ. லேகோ சிட்டி, லேகோ டெக்னிக், லேகோ ஸ்டார் வார்ஸ் ஆகியவை நிறுவனத்தின் மிகப் பிரபலமானவையாக இருக்கின்றன.

1932 இல் ஊலே கிர்க் கிரிஸ்டர்சன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட லேகோவின் முக்கிய விற்பனைப் பொருளான ஒன்றுடனொன்று பொருத்தக்கூட ஆறு லேகோ பகுதிகளை 1949 இல் உருவாக்கியவர் அவரது மகன் கொத்பிரிட் கிர்க் கிரிஸ்டர்சன் ஆகும். அந்த ஆறு லேகோ பகுதிகளையும் 400 மில்லியனுக்கும் அதிகமான விதமாகப் பொருத்தக்கூடியதாக இருந்தது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *