மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.
இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு வாரமாக நீர்ப்பரப்பு, நீர்க்கீழ்ப்பரப்புப் போர், ஒற்றர்களையும் உதவிகளையும் பரிமாறிக்கொள்ளுதல் போன்றவைகளில் பயிற்சி செய்திருக்கின்றன.
1,900 கி.மீ நீளமான நீர்க்கீழ் எரிவாயுக் குழாய்கள், 2,000 மெகாவாட் சக்தியுள்ள நீர்க்கீழ் மின்சாரப் பரிமாறலுக்கான தொடர்புகள் ஆகியவற்றையும் கிரீஸ், இஸ்ராயேல், சைப்பிரஸ் போன்ற நாடுகள் தங்களுக்கிடையே உண்டாக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன.
மறைமுகமாக இஸ்ராயேலின் ஆதிக்கத்துக்குள்ளிருக்கும் காஸா பிராந்தியத்துடன் இஸ்ராயேல் 2010 இல் போரிலிருந்தது. அச்சமயம் காஸாவுக்கு எவ்வித தொடர்புகளும் வெளிநாடுகளுடன் இருக்கலாகாது என்று முடிவுகட்டியிருந்த இஸ்ராயேலின் மத்தியதரைக் கடற்கரைக்குள் காஸாவுக்கு உதவ வந்த துருக்கியக் கப்பலைத் தாக்கி 10 பேரை இஸ்ராயேல் கொன்றது. அதிலிருந்து அதுவரை நட்பாயிருந்த அவ்விரு நாடுகளுக்குமிடையே மனக்கசப்பு நிலவுகிறது.
2016 இல் அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்றை அமெரிக்கா ஏற்படுத்த உதவியது. ஆனால், அதையடுத்து அன்றைய டிரம்ப் அரசு ஜெருசலேமை இஸ்ராயேலின் தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிந்ததிலிருந்து மீண்டும் அவர்களிடையே மனக்கசப்பு வளர்ந்துவிட்டது.
கிரீஸையும் சைப்பிரஸையும் பொறுத்தவரை மத்தியதரைக் கடலில் அவர்கள் தமது பிராந்தியமாகக் கருதும் பகுதியில் கனிவளங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் தனது கடற்படையைத் துருக்கி அனுப்பியிருப்பதால் அவர்களும் துருக்கியுடன் மனக்கசப்பிலிருக்கிறார்கள். கிரீஸுக்கும், துருக்கிக்குமிடையே சமீப காலமாக மீண்டும், மீண்டும் வாய்ச்சண்டைகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே துருக்கிக்கு எதிராக இந்த மூன்று நாடுகளின் ஒற்றுமையான பாதுகாப்பு, பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் மத்தியதரைக் கடற்பிராந்தியத்தில் மேலும் பரபரப்பான நிலைமையையே உண்டாக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்