பொலீவியாவின் மாஜி ஜனாதிபதியைப் பதவியிறக்கியவர்கள் மீது “அரசைக் கவிழ்த்ததாக” குற்றச்சாட்டு.
பொலீவியாவின் ஜனாதிபதியாக இருந்த ஏவா மொராலஸை 2019 இல் பதவியிலிருந்து விலகவைத்தது ஒரு அரசுக் கவிழ்ப்பு என்று குறிப்பிட்டு நாட்டின் 2 இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 12 பேரைக் கைதுசெய்யும்படி நாட்டின் அரச வழக்கறிஞர் உத்தரவிட்டிருக்கிறார்.
இடதுசாரி அரசியல்வாதியான ஏவா மொராலஸ் தனது நாட்டின் ஜனாதிபதியாக 14 வருடங்கள் இருந்தவர். அவர் அந்த நாட்டின் பெரும்பான்மையான பழங்குடிகளைச் சேர்ந்தவர். நாட்டின் பெரும்பான்மை இனத்தவரிலிருந்து வந்த முதலாவது ஜனாதிபதி அவரெ. 2019 இல் அவருக்கெதிரான பல பேரணிகள், போராட்டங்கள் நடாத்தப்பட்டன. இரண்டு தடவைகள் பதவியிலிருந்த அவர் மீண்டும் பதவியைக் கைப்பற்றவிருப்பதாகவும், அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுப் பதவி விலகினார்.
ஏவா மொராலஸ் பதவி விலகியதையடுத்து நாட்டில் ஒரு தற்காலிக அரசு நியமிக்கப்பட்டது. நாட்டின் வலதுசாரிப் பழமைவாதிகளைக் கொண்ட ஜனீன் அக்னேஸ் என்ற பெண் அரசியல்வாதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது அரசு 2020 இல் புதுத் தேர்தல் நடக்கும்வரை பதவியிலிருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் இடைக்கால ஜனாதிபதி ஜனீன் அக்னேஸும் அவரது அமைச்சர்கள் சிலரும் உள்ளார்களென்று தெரியவருகிறது.
பதவியைக் கைப்பற்றியவர்களின் அரசு ஏவா மொராலஸுக்கு எதிராக வழக்குகள் போட்டு அவரைக் கைது செய்வதற்குத் திட்டமிருந்ததால் அவர் பக்கத்து நாடான ஆர்ஜென்ரீனாவில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்தார். அங்கிருந்து அவர் தனது கட்சியை பொலீவியாவில் இயக்கினார்..
ஒக்டோபர் 2020 இல் நடந்த தேர்தலில் மீண்டும் ஏவா மொராலஸின் கட்சியான MAS பதவியேற்றது. என்பவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அதையடுத்து ஏவா மொராலஸ் மீதான கைது பின்வாங்கப்பட்டது. தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நேரிடத் தயாரென்று கூறி ஆர்ஜென்ரீனாவிலிருந்து நவம்பரில் நாடு திரும்பியிருக்கிறார் ஏவா மொராலஸ்.
2019 இல் ஏவா மொராலஸின் அரசைப் பதவி விலகவைக்க நடந்த “போராட்டங்கள்” உண்மையான மக்கள் போராட்டங்களல்ல, திட்டமிட்டு நடாத்தப்பட்ட தீவிரவாத, ஆட்சிக் கவிழ்ப்புச் செயல்களே என்று பொலீவிய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் இடைக்கால அரசின் காலத்தில் நடாத்தப்பட்ட இரண்டு கூட்டுக் கொலைகள் பற்றியும் இராணுவம், பொலீஸ் தலவர்கள் சிலரும் ஜனீன் அக்னேஸும் விசாரிக்கப்படவிருக்கிறார்கள்.
தேர்தலில் பாராளுமன்றத்தின் இரண்டு பாகங்களையும் பெரும்பான்மையால் கைப்பற்றியிருக்கும் இடதுசாரி அரசு ஏவா மொராலஸை வீழ்த்தியதற்கு வன்மம் தீர்க்கவே இந்தக் கைதுகளையும் விசாரணைகளையும் நடாத்துகிறது என்று அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஒரு சாரார். “பொலீவியாவின் நீதித்துறை எப்பக்கமும் சாராதது, நடு நிலையானது,” பொலீவிய அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்