பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல் இஸ்ராயேல் கைப்பற்றிய பாலஸ்தீனப் பிராந்தியங்களில் கட்டிவரும் குடியிருப்புக்கள், நடத்திவரும் இராணுவத் தாக்குதல்களை ஆராய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்மானித்திருக்கிறது.
“இஸ்ராயேல் மீது விசாரிக்கும் நடவடிக்கை எடுப்பது ஒரு பட்சமானது,” என்று பிரதமர் நத்தான்யாஹு அறிக்கை விட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவைத் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது. அம்முடிவின்படி குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படுபவர்களைக் கைதுசெய்யவும் உத்தரவு போடப்படலாம் என்று தெரிகிறது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற உயர்மட்ட வழக்கறிஞரான கம்பியாவைச் சேர்ந்த பத்தூ பென்ஸூடா 2019 இல் சேகரித்து உண்டாக்கிய அறிக்கையின்படி பாலஸ்தீனப் பிராந்தியத்தில் போர்க்குற்றங்களை இஸ்ராயேல் இழைத்திருப்பதாகக் குறிப்பிட்டப்படுகிறது. அவை ஜூன் 2014 க்குப் பின்னர் நடந்த குற்றங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. நில ஆக்கிரமிப்பும், யூதக் குடியிருப்புக்களும் இஸ்ராயேலின் குற்றங்களில் முக்கியமானவை என்று கருதப்படுகிறது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதம வழக்கறிஞராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கரீம் கான் மேற்கண்ட விசாரணையில் முக்கிய பொறுப்பை எடுப்பார் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்