ஸ்கானியா நிறுவனம் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிப்படுத்த ஊடகங்கள் மீது இந்திய அமைச்சர் பாய்கிறார்.
இந்தியாவின் வீதிகள், போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி சுவீடன் பேருந்து நிறுவனமான ஸ்கானியாவிடம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்களுடன் சுவீடிஷ் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டிருண்டது. அதைத் தொடர்ந்து அவ்விபரங்களை ஜேர்மனியின் ZDF, உம் வெளியிட்டிருந்தது. அவைகள் தன் மீது அபாண்டமாகப் பொய்ச் சொல்வதாக அமைச்சர் தனது வக்கீல் மூலம் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
2016 இல் நாக்பூரில் நடந்த நிதின் கத்காரியின் மகளின் திருமணத்துக்குப் பல கோடி ரூபாய்கள் செலவானது அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியினராலும் விமர்சிக்கப்பட்டது. அதற்காக 50 பிரத்தியேக விமானங்கள் வாடகைக்கெடுக்கப்பட்டதாகவும் பத்திரிகைகள் எழுதியிருந்தன. பாஜக அரசு ஒரு திருமணத்துக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் செலவழிக்கலாகாது என்று குறிப்பிட்டிருக்கும்போது நிதின் கத்காரி தனது மகளுடைய கல்யாணத்துக்காகச் செலவழித்த விபரங்களை வெளியிடவேண்டுமென்றும் குரலெழுப்பப்பட்டது.
அக்கல்யாணத்துக்கு சுவீடிஷ் நிறுவனமான ஸ்கானியா பிரத்தியேக பேருந்துகளை நிதின் கத்காரியின் மகனுக்கு வேண்டியவரான ஒருவரின் நிறுவனத்துக்குக் கொடுத்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன. கட்டணம் கொடுக்காமல் நன்கொடையாக அந்தப் பேருந்துகள் கொடுத்ததன் மூலம் ஸ்கானியா இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பேருந்துகளை விற்பதற்காக நிதின் கத்காரி ஒழுங்குசெய்தார் என்பது குற்றச்சாட்டாகும்.
அமைச்சரின் காரியாலயத்தின் மூலம் குறிப்பிட்ட ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில் “அந்தப் பேருந்துகளுக்கும் அமைச்சருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அமைச்சரின் மகளின் திருமண விழாவில் பாவிக்கப்பட்டது, அதற்காக அமைச்சர் குடும்பத்தினர் கட்டணம் செலுத்தவில்லை என்பது வெறும் கற்பனையே,” என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்