பெருந்தொற்றுக்களின் ஒரு வருடத்தினுள் தனது மூன்றாவது ஆரோக்கியத்துறை அமைச்சரை மாற்றும் பொல்சனாரோ.
கடந்த வருட மே மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டில் சுமார் 15,000 பேரின் உயிர்களைக் கொவிட் 19 குடித்த சமயத்தில் தனது இராணுவத் தளபதிகளிலொருவரை நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சராக்கினார் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ. தற்போது தினசரி 2,000 பேர் அந்தக் கொடும் வியாதிகள் இறக்கும் சமயம் 280,000 பேர் இறந்தபின் மீண்டுமொரு தடவை அமைச்சர் மாற்றம் அறிவிக்கப்படுகிறது.
மக்கள் ஆரோக்கியத் துறையில் எந்தவிதப் பின்னணியுமில்லாத பஸுவெல்லோ அமைச்சராகச் செயற்பட முடியாமல் தனது கைகள் கட்டிப் போடப்பட்டிருப்பதாகவே குறிப்பிட்டு வந்திருக்கிறார். ஜனாதிபதியே தனது அமைச்சின் முடிவுகளையும் எடுப்பதாகக் குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு முன்னரிருந்த அமைச்சர்களெல்லோருக்கும் போலவே ஜனாதிபதிக்கும் மக்கள் ஆரோக்கிய அமைச்சருக்கும் நாட்டு மக்களை எப்படித் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பது என்பது பற்றி முரண்பாடுகளே இருந்து வந்திருக்கின்றன.
மார்ஸெல்லோ குவெய்ரோகா என்ற இருதய மருத்துவ நிபுணர் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். “கொரோனாவுக்கெதிரான போர் இனி திருப்பித் தாக்குவது என்ற நிலைப்பாடாக மாறும்,” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி எதற்காக அமைச்சரை மாற்றுகிறார் என்பதைச் சொல்லவில்லை.
தொற்றுநோய் பரவுதலைக் குறைக்க அதிகமாக இயங்கவில்லை, மனாகுவாவில் தேவையான அளவு மருத்துவ சேவைகளுக்கு உதவவில்லை, விளைவாக நூற்றுக்கணக்கானோர் அனாவசியமாக இறந்தார்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக பதவியிழக்கும் அமைச்சர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தினசரி 2,000 பேருக்கு மேர் இறந்து வருவதுடன் அமெஸோனாஸ் பகுதியில் திரிபடைந்து பரவிவரும் கொரோனா கிருமிகள் மிகவும் மோசமாக மக்களைப் பாதிக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது. உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு இரண்டாவது முறையாக பிரேசிலில் மக்களைத் தனிமைப்படுத்த, நகர முடக்கங்களை அமுல்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறது. ஜனாதிபதி பொல்சனாரோ அப்படியான நடவடிக்கைகளுக்கு ஆதரவானவரல்ல.
சாள்ஸ் ஜெ. போமன்