டிரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக ரஷ்யா 2020 அமெரிக்கத் தேர்தலில் மூக்கை நுழைத்துச் செயற்பட்டது!
2020 இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளியேயிருந்து மூக்கை நுழைத்த நாடுகளைப் பற்றிய விபரங்களை அமெரிக்காவின் உளவுத்துறை நேற்றுச் செவ்வாயன்று வெளியிட்டது. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் திட்டமிட்டு அம்முயற்சிகளில் ஈடுபட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
எந்த ஒரு நாடுகளும் வாக்காளர்களைப் பதிவு செய்யும் கட்டத்திலோ, வாக்குகளை எண்ணும் விடயங்களிலோ தங்கள் கைவரிசைகளைக் காட்ட முயலவில்லை. அவர்களது முயற்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றிய வாக்காளர்களின் கணிப்பிலே மாற்றங்களை உண்டாக்குவதிலேயே இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் தமக்குச் சாதகமான நிலைமையை உண்டாக்க விரும்பிய சீனா தேர்தல் நடவடிக்கைகளுக்குள் மூக்கை யாருக்கு ஆதரவாக நுழைத்தாலும் அது தவறாகவே முடியும் என்று எண்ணித் தள்ளியிருந்தது என்கிறது உளவுத்துறை அறிக்கை.
ஜோ பைடன் பற்றி மோசமான விபரங்களையும், கட்டுக்கதைகளையும் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மூலம் பரப்புவதில் ரஷ்யா ஈடுபட்டது. அத்துடன் அமெரிக்கத் தேர்தல் அமைப்புப் பற்றிய சந்தேகங்களைக் கிளப்புவதன் மூலம் அதன் மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்துவதிலும் ரஷ்யா ஈடுபட்டது.
மேலும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பற்றிய மோசமான கதைகளைப் பரப்புவதில் உக்ரேனின் பாராளுமன்ற உறுப்பினர் அந்திரே டெர்காஷ் ஈடுபட்டார். அவர் டிரம்ப்பின் நீண்டகால நண்பரும், தனிப்பட்ட வழக்கறிஞருமான ரூடி ஜுலியானியுடன் தொடர்புள்ளவர்.
ஜோ பைடன் வெல்வதற்கு ஆதாயமான விடயங்களைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்த நாடாக ஈரான் சுட்டிக்காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்