மியான்மார் மக்கள் தமது வீடுகளை விட்டுவிட்டுத் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி முக்கிய அரசியல்வாதிகளைச் சிறைப்படுத்தியிருக்கும் மியான்மார் இராணுவத்தின் கோரப்பிடி இறுகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் அவர்கள் மக்களின் ஊர்வலங்கள், பேரணிகள், கூட்டங்களுக்குச் சென்று மக்களைக் கோரமாகத் தாக்கிப் பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் காயப்பட்டிருக்கிறார்கள்.
இராணுவ அரசுக்கெதிராகக் குரல் கொடுப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோலவே ஊர்வலங்களில், வேலை நிறுத்தங்களில் பங்குபற்றுபவையெல்லாம் சட்டத்துக்கு எதிரானவையாக்கப்பட்டிருக்கின்றன. மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனை மூன்று வருடக் கடும் வேலை முதல் மரணதண்டனை வரை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய நகரமான யங்கூனில் வாழ்ந்து வேலை செய்பவர்கள் பலர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். சமீப நாட்களில் இராணுவம் அவர்களைக் கொடுமைப்படுத்தி வருவதாகக் கூறிக்கொண்டு அங்கிருந்து தமது ஊர்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நகரெங்கும் தமது இராணுவ வாகனங்களுடன் சுற்றித்திரியும் இராணுவத்தினர் இஷ்டப்படி மக்களைத் தொந்தரவு செய்கிறார்கள். இராணுவத்தின் சட்டங்கள் தவிர்ந்த எவையும் தற்போதைய நிலையில் மதிப்பிழந்திருக்கின்றன.
மியான்மாரில் பெருமளவு மதிக்கப்படும் புத்த பிக்குகளின் அமைப்பு இராணுவத்தை “கோழைத்தனமான நடவடிக்கைகளால் மக்களைத் துன்புறுத்துபவர்கள்,” என்று குறிப்பிட்டு உடனடியாக மக்களைத் துன்புறுத்துவதை நிறுத்தும்படி கேட்டிருக்கிறது. யங்கூனில் மீதமாக இருக்கும் மனித உரிமைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நிலைமை படு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று பயப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்