ஒருவர் மீதொருவர் சேற்றை வீசியடிக்கும் ஜோ பைடனும் புத்தினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார்கள்.
“ரஷ்யாவின் ஜனாதிபதி ஒரு இருதயமற்ற கொலைகாரன்,” என்ற ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்குத் தொலைத் தொடர்பு மூலம் பத்திரிகையாளர்களுக்குப் பதில் கூறினார் புத்தின். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை நுழைத்ததுக்காக புத்தின் பெரும் விலையொன்றைக் கொடுக்கவேண்டியிருக்குமென்றும் குறிப்பிட்ட பைடனுக்குப் பதிலடியாக, ரஷ்யா அமெரிக்காவிலிருக்கும் ரஷ்யத் தூதரை வரவழைத்துத் தன் அதிருப்தியையும் தெரிவித்திருந்தது.
புத்தின் தனது பேட்டியில், சில பிராந்தியங்களிலிருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், வேறு முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் ஜோ பைடனுடன் கலந்துரையாடித் தீர்வு காணத் தயாராக இருப்பதாகச் சொன்னார் புத்தின். அத்துடன் அவர் ஒரு பகிரங்கமான கலந்துரையாடலை அதற்காகப் பிரேரித்திருக்கிறார். பேச்சுவார்த்தைகளுக்காகக் கதவைத் திறந்திருக்கும் புத்தின் அது எங்கே, எப்படி நடத்தப்படுமென்று தெரிவிக்கவில்லை
ஜோ பைடனுக்குப் பதிலடி கொடுக்கும்போது புத்தின் சிறுபிள்ளைகள் மற்றவரைக் குற்றஞ்சாட்டும்போது “எவர் சொன்னாரோ அவர்தான் செய்தார்,” என்று சொல்வதைச் சுட்டிக்காட்டி “அமெரிக்கா, சர்வதேசத்தில் செய்யும் கொலைகளை இடித்துக் காட்டினார். மேலும், அமெரிக்காவின் “பிளக் லைவ்ஸ் மட்டர்,” போராட்டங்களையும் சுட்டிக் காட்டி “நாம் பொதுவாக எங்களிடமுள்ள குறைபாடுகளை மற்றவரிடம் இருப்பதாகக் குத்திக் காட்டுவது வழக்கம். நான் ஜோ பைடன் நலமாக வாழவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். அதை எந்தவித நேர்முரணையும் கொள்ளாமல் மனதாரச் சொல்கிறேன்,” என்றார்.
ஜோ பைடன் புத்தினை, ரஷ்யாவைக் காட்டமாக விமர்சிக்கக் காரணம் தானும் டெமொகிரடிக் கட்சியினரும் “ரஷ்யா மீது கடுமையாக இருப்பதாகக் காட்டவே” என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பொதுவாக டொனால்ட் டிரம்ப் டெமொகிரடிக் கட்சியினர் “ரஷ்யாவுடன் மென்மையாக இருக்கிறார்கள்,” என்று டிரம்ப் பல தடவைகள் சாடியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்