கொன்று துண்டாடப்பட்ட ஆறு சிங்கங்கள் உகண்டாவின் தேசிய வனப் பிராந்தியத்தில் காணப்பட்டன.
வனப் பாதுகாவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு சிங்கங்களின் உடல்களில் சில பாகங்களைக் காணவில்லை என்று உகண்டாவின் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. அந்தச் சிங்கங்கள் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டு அவைகளின் சில பாகங்களை விற்பதற்காகக் கொலைகாரர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உகண்டாவில் இது நடப்பது முதல் தடவையல்ல 2018 இல் எட்டுக் குட்டிகள் உட்பட பதினொரு சிங்கங்கள் இதேபோன்று நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியை அடுத்து வாழும் விவசாயிகள் மீது சந்தேகம் தோன்றினாலும், எவர் அதைச் செய்தார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே நடக்கும் இயற்கை வளங்களுக்கான போட்டியின் விளைவே இதுவென்று கருதப்படுகிறது.
வன விலங்குகள் பாதுகாப்புப் பிராந்தியங்களையடுத்து வாழும் விவசாயிகளுக்கு அரசு அப்பிராந்தியத்தில் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணத்தில் 20 % ஐக் கொடுத்து வருகிறது. இவ்வனவிலங்குகள் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு சுமார் 1.6 பில்லியன் டொலர்களை வருடாவருடம் ஈட்டித் தருகிறது.
உகண்டாவில் சுமார் 493 சிங்கங்கள் காடுகளில் வாழ்வதாக 2017 இல் எடுக்கப்பட்ட கணிப்பீடு தெரிவிக்கிறது. இறந்துபோன காட்டுப்பகுதியில் வாழும் சிங்கங்கள் மரங்களில் ஏறுக்கூடிய வகையென்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகைச் சிங்கங்களே கொல்லப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்