லத்தீன் அமெரிக்காவே கொவிட் 19 ஆல் உலகில் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இறப்பு எண்ணிக்கைகள் மோசமாகி, உலகின் மற்றைய பாகங்களை விட நீண்ட காலம் கல்விக்கூடங்கள் மூடப்பட்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருந்தொற்று மிகவும் கடுமையாக மக்களை வாட்டி வருகிறது. லத்தீன் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காகத் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்தும் பிராந்திய வங்கி இது பற்றிக் கலந்தாலோசிக்க கொலம்பியாவில் மாநாடொன்றில் கூடியபோதே மேற்கண்ட விபரங்கள் வெளியிடப்பட்டன.
பெருந்தொற்றின் விளைவுகளாலும், பக்க விளைவுகளாலும் 44 மில்லியன் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடுகளின் மொத்தத் தயாரிப்புப் பெறுமதி 80 % ஆல் குறைந்திருக்கிறது. 1980 களில் இப்பிராந்தியத்து நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றன்பின்னொன்றாக வீழ்ச்சியடைந்தது போன்ற மோசமான நிலையை இப் பெருந்தொற்று உண்டாகியிருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இந்த நாடுகள் பெற்ற சுபீட்சம் ஒரே ஆண்டில் கரைந்து போயிருக்கிறது.
தற்போது நாளாந்தம் சுமார் 20,000 கொவிட் 19 இறப்புக்களைச் சந்தித்து வரும் பிரேசிலின் சௌ பௌலோவில் முதலாவது கொரோனாத் தொற்றைச் சந்தித்த லத்தீன் அமெரிக்காவில் இதுவரை இவ்வியாதியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 700,000 ஆகும். இத் தொகையானது உலகில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கையின் 26 விகிதமாகும். அதாவது உலகின் 9 விகித சனத்தொகையைக் கொண்ட லத்தீன் அமெரிக்காவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 விகிதமாக இருக்கிறது.
கல்விக்கூடங்களைப் பொறுத்தவரை சராசரியாக 158 நாட்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. உலக நாடுகளில் சராசரியாகப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நாட்கள் 95 ஆகும். மிகப் பெருமளவில் ஏழைப் பிள்ளைகளைக் கொண்ட லத்தீனமெரிக்க நாடுகள் பலவற்றில் தொலைத்தொடர்புகளோ, அவற்றைப் பாவிப்பதற்கான கருவிகளின் வசதிகளோ இல்லாத குடும்பங்களில் கல்வி இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்