சுயஸ் கால்வாயின் வாசலில் மாட்டிக்கொண்ட கப்பலொன்று கால்வாய்ப் போக்குவரத்தை முற்றாக இடையூறுசெய்கிறது.
செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் கால்வாயான சுயஸ் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு போக்குவரத்து வழியாகும். இதுவரை எப்போதும் நடந்திராத மோசமான போக்குவரத்து விபத்து அதன் தென் வாசலில் 400 மீற்றர் நீளமான பொருட்களைக் கொண்டுசெல்லும் ஒரு கரையை இடித்து விபத்துண்டாக்கி மாட்டிக்கொண்டிருக்கிறது. அக்கப்பலில் 20,000 கொள்கலன்களும் நிறைக்கப்பட்டிருக்கின்றன.
1800 – களின் கடைசியில் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட இக்கால்வாய் ஐரோப்பிய – ஆசியப் நீர்வழிப் போக்குக்கு அத்தியாவசியமானது. இக்கால்வாயில்லாவிடில் அப்போக்குவரத்துக்கள் ஆபிரிக்காவைச் சுற்றிக்கொண்டுதான் பயணிக்கவேண்டும். இக்கால்வாயைத் தம் கைவசப்படுத்த போர்கள் உட்பட பல உத்திகள் கையாளப்பட்டுள்ளன. அதன் கட்டுப்பாடு எகிப்தின் கையிலிருக்கிறது.
Evergreen Marine Corp நிறுவனத்தைச் சேர்ந்த 220,000 தொன் பாரமுள்ள அக்கப்பல் நெதர்லாந்தின் ரொட்டர்டாம் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கடும் காற்று வீசியதால் அது அந்த விபத்தில் மாட்டிக்கொண்டதாக நிறுவனம் அறிவிக்கிறது. கப்பலை அவ்விடத்திலிருந்து அகற்றும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.
உலகின் 12 விகிதமான நீர்ப்பரப்புப் போக்குவரத்து நடக்கும் சுயஸ் கால்வாயினூடாகத் தினசரி சராசரி 50 கப்பல்கள் பயணிக்கின்றன. சந்தர்ப்பங்களில் அதை விட மிக அதிக இலக்கங்களிலான கப்பல்கள் பயணிக்கின்றன. செவ்வாயன்று ஏற்பட்ட இவ்விபத்தின் காரணமாக மறிக்கப்பட்ட கப்பல்கள் நூற்றுக்கு மேற்பட்டவை கால்வாயைக் கடப்பதற்கு வரிசையில் நிற்கின்றன.
இன்றே அக்கப்பல் அங்கிருந்து அகற்றப்படக்கூடுமென்ற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், சுயஸ் கால்வாய்ப் போக்குவரத்தின் ஒரு நாள்த் தடைப்படலால் மட்டுமே உலகின் வர்த்தகத்துக்கும், தனியாருக்குத் தேவையான பொருட்கள் தகுந்த நேர்த்தில் கிடைப்பதற்கும் இடையூறு உண்டாகுமென்று எச்சரிக்கப்படுகிறது.
இன்றே அகற்றப்படாமல் மேலும் ஓரிரு நாட்கள் தாமதமாகுமானால் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எச்சரிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்றுக்களால் அறுதித் தயாரிப்புக்களுக்குத் தேவையான உதிரிப் பொருட்கள் சீனா போன்ற நாடுகளிலிருந்து வருவதற்கு ஏற்பட்ட தாமதங்கள் ஏற்கனவே உலக வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்த இடையூறும் அதை மேலும் தாக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்