பதவியேற்று 64 நாட்களின் பின்னர் முதல் தடவையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதியிடம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் குவியும் அகதிகள் நிலைமை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவின் கொவிட் 19 நிலைமை பற்றி அவர் குறிப்பிட்டார்.
“நான் அமெரிக்காவின் சிக்கல்களைத் தீர்க்கவே தெரிந்தெடுக்கப்பட்டேன், பிளவுகளை ஏற்படுத்த அல்ல,” என்று குறிப்பிட்டார், ஜோ பைடன். தனது ஆட்சியின் முதலாவது நூறு நாட்களுக்குள் நாட்டில் 100 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று பதவியேற்றபோது உறுதி கொடுத்திருந்த அவர், அந்த இலக்கம் கடந்த வாரமே நிறைவடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். அதனால் அதே 100 நாட்களுக்குள் 200 மில்லியன் பேருக்குத் தடுப்பு மருந்து கொடுப்பது புதிய குறியாக அறிவிக்கப்பட்டது.
கொரோனாத் தொற்றுக்கள் அமெரிக்காவில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்தபடி மீண்டும் சீராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டாவது தவணையும் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிபோடப் போவதாகவும் ஜோ பைடன் அறிவித்தார்.
டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட அமெரிக்காவின் தேர்தல் நடாத்தும் வழி பற்றிய சட்டங்களில் ரிபப்ளிகன் கட்சியினர் பிரேரித்திருக்கும் மாற்றங்களைக் கோபத்துடன் சாடினார் ஜோ பைடன். 17.00 மணிக்கு வாக்குச் சாவடிகளை மூடுவது என்ற மாற்றம் வேலைக்குப் போய்விட்டு வந்து வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றார் அவர். இன்னொரு, மாற்றமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்குப்போடக் காத்திருப்பவர்களுக்குக் குடிக்க நீர் கொடுக்கத் தடை போடுவது பற்றி “கேவலமானது, அமெரிக்காவுக்கு ஒத்துவராதது,” என்றார் அவர்.
வயதுக்கு வராத பிள்ளைகள் பெற்றோரின்றி டெக்ஸாஸிலிருக்கும் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்க்கும் படங்கள் சமீப வாரங்களில் பத்திரிகைகளில் வெளிவந்தன. அப்படங்களில் அவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்வதைக் காணமுடிந்தது. பைடனின் அதிகாரிகள் அப்படங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்க முயன்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் கோரி வருபவர்கள் அதிகமாகியிருப்பதை ஒத்துக்கொண்ட பைடன் அவர்களில் பெரும்பாலானோர் திருப்பியனுப்பப்படுவதாகக் குறிப்பிட்டார். தஞ்சம் தேவையானவர்களை விசாரிக்கும் வரையில் தங்கவைக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் தங்குமிடங்கள் போதாமையால் எல்லைகளில் ஒழுங்கின்மை நிலவுவதையும் அவர் ஒத்துக்கொண்டார்.
நெருக்கியடித்துக்கொண்டு வாழவேண்டிய நிலையிலிருக்கும் பிள்ளைகளின் நிலைமை, எல்லைகளில் ஒழுங்கின்மை, தங்க வசதிகள் போதாமைக்குக் காரணம் அப்படியான தங்குமிடங்கள் பலவற்ற டிரம்ப் தனது காலத்தில் மூடிவிட்டதே என்று குறிப்பிட்டார். அவைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவை தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்