தனது ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு விருந்தினராக மோடியை வரவேற்கிறது பங்களாதேஷ்.

1971 மார்ச் 26 இல் சுதந்திரமடைந்த பங்களாதேஷ் இன்று அதன் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதே சமயம் பங்களாதேஷின் தேசத்தந்தையென்று போற்றப்படும் முதலாவது பிரதமர் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் 100 பிறந்த நாளும் நினைவு கூரப்படுகிறது. 

இன்றும், நாளையுமாக பங்களாதேஷில் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் மோடிக்கு இது தனது நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும். இப்பிரயாணத்தில் நாட்டின் பிரதமரும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் மகளுமான ஷேக் ஹஸீனாவைச் சந்தித்து ஐந்து “நல்லுறவு ஒப்பந்தங்களில்” கையெழுத்திடுவார். 

இந்த விஜயத்தின் போது மோடி  தென்மேற்குப் பாகத்திலிருக்கும் ஒரகாந்தி, யஷோரேஷ்வரி கோவில்களுக்கு விஜயம் செய்து பூசைகள் ஒப்புக்கொடுப்பார். 16 ம் நூற்றாண்டில் இந்திய அரசரொருவரால் கட்டப்பட்ட யஷோரேஷ்வரி ஆலயம் இந்தியாவையும் அதைச் சுற்றியிருக்கும் நாடுகளிலுமிருக்கும் 51 முக்கிய சக்தி வழிபாட்டிடங்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது. 

கோபால்கஞ்ச்சிலிருக்கும் ஒரகாந்தி ஆலயத்தையடுத்து மத்துவா என்ற இந்து மதச் சமூகத்தினர் வாழ்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் மேற்கு வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். அந்தச் சமூகத்தினரைச் சந்தித்துப் பேசுவதுடன் அவர்களுடையே கோவிலில் மோடி பூசையில் பங்குகொள்வார்.  12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மத்துவா சமூகத்தினரின் குரு ஹரிசந்த் தாக்கூரின் பிறந்த இடமாகும். 

மோடியின் வருகையையொட்டி அவ்விரு கோவில்களும் சுத்தப்படுத்தப்பட்டு, திருத்தப்பட்டன. அப்பிராந்தியங்களில் அரசின் உதவியுடன் போக்குவரத்து ஒழுங்குகள் செப்பனிடப்பட்டன. அந்தப் பிரதேசத்துக்கு மோடி முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அவை இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் எல்லையை அடுத்திருப்பதும் மேற்கு வங்காளத்தில் நடக்கவிருக்கும் தேர்தலும் தான் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *