எகிப்தின் தஹ்தா நகரில் இரண்டு ரயில்கள் மோதியதில் ஆகக்குறைந்தது 32 பேர் இறப்பு.
எகிப்தின் தலை நகரிலிருந்து 230 கி.மீ தூரத்திலிருக்கும் நைல் நதியை அடுத்துள்ள நகரொன்றில் ஒரு ரயில் மீது இன்னொரு ரயில் மோதியதால் சுமார் 32 பேர் இறந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதைத் தவிர சுமார் 110 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ஆபிரிக்காவிலேயே முதலாவது நாடாக ரயில் போக்குவரத்தைத் தொடங்கிய எகிப்தில் ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதுண்டு.
ஓடிக்கொண்டிருந்த ஒரு ரயில் மீது பின்னால் வந்து இன்னொரு ரயில் மோதியதாலேயே இந்த ரயில் விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக எகிப்தில் நடக்கும் ரயில் விபத்துக்களுக்கு ரயில் போக்குவரத்துத் தளபாடங்கள், வீதிகளை ஒழுங்காகப் பராமரிப்பதே காரணம். ஆனாலும் ஏற்பட்டிருக்கும் விபத்துக்குக் காரணமாக முன்னால் போய்க்கொண்டிருந்த ரயிலின் தடுப்பக்கருவியை யாரோ திடீரென்று நிறுத்தியதே காரணமென்று குறிப்பிடப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்தவர்கள் பலர் தாமே காயமடைந்தவர்களைத் தூக்கியெடுத்து வெளியே கொண்டு வந்து உதவுகிறார்கள். இறந்தவர்களின் சடலங்களை ஒன்றன்பின்னொன்றாக நிலத்தில் கிடத்தி உதவுகிறார்கள். மூன்று ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று இடிபட்டு பாதையிலிருந்து விலகிப் புரண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வருடாவருடம் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடக்கும் எகிப்தில் ஆகக்குறைந்தது ஒன்றிலாவது பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதுண்டு.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக உலகிலேயே ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்திய நாடான எகிப்தில் 9,750 கி.மீ ரயில் பாதைகளுண்டு. தினசரி 1.5 மில்லியன் மக்கள் பயணிக்கும் எகிப்திய ரயில் சேவை 705 ரயில் நிலையங்களைக் கொண்டது.
எகிப்தில் நடந்த பெரும் ரயில் விபத்துக்களிலொன்றான 1995 விபத்தில் 75 பேர் இறந்தார்கள். அவ்விபத்திலும் இதே போலவே பயணித்துக்கொண்டிருந்த ஒரு ரயிலைப் பின்னால் வந்த இன்னொரு ரயில் மோதிய நிகழ்ச்சி நடந்தது. அதை விட மோசமான விபத்து 2002 இல் நடந்தது. ஒரு ரயில் தீப்பிடித்தும் தொடர்ந்து 9 கி.மீற்றர்கள் பயணித்த பின்னரே நிற்பாட்டப்பட்டது. 383 பேர் இறந்ததாக அரச புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்படும் அவ்விபத்தில் இறந்தவர்களின் உண்மையான தொகை 1,000 க்குக் குறையாது என்கிறார்கள்.
கடைசியாக நடந்த மோசமான விபத்தில் பலியானவர்கள் தொகை 40 ஆகும். பல நூறு பேர் காயமடைந்ததாகக் குறிப்பிடப்படும் அவ்விபத்து அலெக்ஸாந்திரா ரயில் நிலையத்தில் நடந்தது. இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று மோதிக்கொண்டன.
சாள்ஸ் ஜெ. போமன்