மொசாம்பிக் ஹோட்டலொன்றினுள் சுமார் 185 பேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மொசாம்ப்பிக்கின் வடக்கிலிருக்கும் பால்மா நகரின் அமாருலா லொட்ஜ் ஹோட்டலைப் புதனன்று இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்று கைப்பற்றியிருக்கிறது. அப்பகுதியில் அவர்கள் தாக்கியபோது அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் பலரும் அந்த ஹோட்டலுக்குள் ஓடித் தஞ்சம் புகுந்தனர். மொத்தமாக சுமார் 185 பேர் அதனுள்ளிருக்க ஆயுதம் தரித்த குழுவினர் அதைச் சுற்றி வளைத்திருந்தனர்.
வெள்ளியன்று அமாருலா ஹோட்டல் அவர்களால் தாக்கப்பட்டதாகவும் அதற்குள் தஞ்சம் புகுந்திருந்த வெளிநாட்டினர் ஒரு சாரார் கொல்லப்பட்டதாகவும் தென்னாபிரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் அந்த ஹோட்டலைப் பாதுகாத்து அரண் அமைத்திருந்த மொசாம்பிக் பாதுகாப்புப் படை தம்மிடமிருந்த ஆயுதங்கள் போதாததால் உள்ளே தஞ்சம் புகுந்திருந்தவர்களைக் கைவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து அவர்கள் தென்னாபிரிக்கத் தனியார் பாதுகாப்பு நிறுவனமான Dyck Advisory Group ஆல் பாதுகாக்கப்பட்டு வந்தனர். DAG படைகள் மூன்று ஹெலிகொப்டர்கள் மூலம் பறந்து தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வந்தன. ஆனால், வெள்ளியன்று அவர்களுடைய ஹெலிகொப்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் அவர்களும் அந்த ஹோட்டலுக்குள் மாட்டிக்கொண்டவர்களைக் கைவிடவேண்டியதாயிற்று.
மொசாம்பிக்கின் அப்பிராந்தியத்தில் இயற்கை எரிவாயுவை எடுத்து வந்த பிரெஞ்ச் டோட்டல் (Total) நிறுவனத்துக்கு எதிரான தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நகருக்கருகே இயற்கை எரிவாயுவை எடுத்து வேறிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான குழாய்களை அமைத்து வந்த டோட்டல் நிறுவனம் கடந்த டிசம்பரில் அதைக் கைவிட்டதாக அறிவித்திருந்தது.
கடந்த வாரத்தில் டோட்டல் தனது எரிவாயு எடுத்தல் திட்டத்தை மீண்டும் கையெடுக்கப் போவதாக அறிவித்ததை அடுத்தே இத்தாக்குதல் நடந்திருப்பதால் அதன் காரணம் மொசாம்பிக் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அதற்கெதிராக இத்தாக்குதலைச் செய்திருக்கலாமென்று கருதப்படுகிறது. நீண்ட காலமாகவே இவ்வெதிர்ப்பு இருந்து வந்தது.
புதனன்று நடந்த தாக்குதலில் பால்மா நகர மக்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தில் பலரைக் கொன்றார்கள். வெள்ளியன்று ஹோட்டலுக்குள்ளிருந்த பல வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எந்தெந்த நாட்டைச் சேர்ந்த எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்