இந்தோனேசியாவின் மெரபி எரிமலை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.
“நெருப்பு மலை” என்று அழைக்கப்படும் மெரபி மலையிலிருந்து சனியன்று சுமார் 600 மீற்றர் உயரத்துக்குச் சுவாலைகள் எழுந்திருக்கின்றன. அந்த நெருப்புச் சுவாலையுடன் கலந்து வான்வெளியில் எரிமலைக் குழம்பையும் கற்களையும் உமிழ்கிறது மெரபி. அக்கற்கள் இந்தோனேசியத் தீவுகளிலொன்றான ஜாவாவில் மக்கள் வாழுமிடங்களில் விழுந்ததாகத் தெரிகிறது.
பல நூறு வருடங்களாக இதே போன்று அடிக்கடி துயிலிலிருந்து எழுந்து செயல்படும் மெரபி நவம்பர் மாதத்திலிருந்தே விழிக்க ஆரம்பித்திருந்தது. இந்த இடைவெளியில் எரிமலை அடிக்கடி 2 மைல் உயரத்துக்குத் தனது குழம்பை உமிழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் செயற்பாடு வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடும் இந்தோனேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிடுகிறது.
2010 இல் இந்த எரிமலையின் குழம்பு, நெருப்பு வீச்சு ஆகியவை சுமார் 300 பேரைக் கொன்றது.
சாள்ஸ் ஜெ. போமன்