உலகின் மூன்றாவது பெரிய கொம்யூனிஸ்ட் கட்சியை அழித்துத் தள்ளியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் வுடூடு.

தனது நாட்டில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமைக் குற்றங்களுக்காக வருத்தம் தெரிவித்தார் இந்தோனேசிய ஜனாதிபதி யோகோ வுடூடு. இந்தோனேசியாவின் கடந்த காலத்தில், 1960 கள், 1990 களில் நாட்டில் நடத்தப்பட்ட அராஜகங்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றி அவர் வருத்ததுடன் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டுத் தலைவர் என்ற பொறுப்புடன், தெளிவான மனதுடனும், நேர்மையான இதயத்துடனும் நடந்திருக்கும் பல சம்பவங்களில் மொத்த மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறேன், அவை நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வேதனையில் பங்கேற்கிறேன்,” என்று வுடூடு குறிப்பிட்டார். அந்தச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியிலும் உதவவும் மறுவாழ்வளிக்க உதவரும் அரசு முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவில் சுமார் கால் நூற்றாண்டாக நிலவிவந்த சர்வாதிகார ஆட்சியை 1998 ம் ஆண்டில் ஆரம்பித்துத் தொடர்ந்த மாணவர் போராட்டங்கள், மக்கள் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டுவந்தன. அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுக் காணாமல் போனவர்கள் பலர் பற்றிய விபரங்கள் இன்னும் எவருக்கும் தெரியாது.

1960 ம் ஆண்டுக்காலத்தில் இந்தோனேசியாவில் கொம்யூனிச இயக்கம் பலம்பெற்றுத் தளைத்தது. சோவியத், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக மிகப்பெரிய கொம்யூனிஸ்ட் கட்சி இந்தோனேசியாவில் உண்டாகியது. அச்சமயத்தில் அவ்வியக்கத்துக்கு எதிராக அரசு செயற்பட்டு சுமார் அரை மில்லியன் பேரைக் கொன்றொழித்தது. அந்தக் கம்யூனிச ஒழிப்பு அலையில் நாட்டின் தலைவராகியவரே சர்வாதிகாரி சுகார்ட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *