மொசாம்ப்பிக்குக்கு உதவத் தனது இராணுவத்தை அனுப்பவிருப்பதாகப் போர்த்துக்கல் அறிவிப்பு.
கடந்த வாரம் மொசாம்பிக் – தன்சானிய எல்லையிலிருக்கு முக்கிய நகரமான பால்மாத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறது அல் – ஷபாப் என்ற ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பல பிரதேசங்களைக் கைப்பற்றி, சர்வதேச, உள் நாட்டு கூட்டுறவால் வீழ்த்தப்பட்ட ஐ.எஸ் என்ற பயங்கரவாத இஸ்லாமிய இயக்கத்தின் கிளையொன்றே குறிப்பிட்ட அல் – ஷபாப் அமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
தொடர்ந்த நாட்களில் ஐ.எஸ் அமைப்பு பால்மா நகரத்தைத் தாம் கைப்பற்றியிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சுமார் ஒரு டசின் பேர் அங்கே இறந்ததாக மொசாம்பிக் அரசு அறிவித்திருந்தாலும் உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. அங்கிருந்து தப்பியவர்கள் கால் நடையாகவும், கரையோரங்களிலிருந்து படகுகள் மூலமும் தப்பிப் பக்கத்து நகரங்களுக்குச் சென்று தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
தீவிரவாதிகள் பல நாட்கள் முற்றுகையிட்டுத் தாக்கியபோது போதிய ஆயுதங்களின்றிப் பால்மா நகரைக் கைவிட்டுவிட்டு ஓடினர் மொசாம்பிக் இராணுவத்தினர். தொடர்ந்தும் அந்த நகரிலிருந்து தப்பி ஆங்காங்கே தஞ்சம் புகுந்திருக்கும் வெளி நாட்டவர் உட்பட்ட பத்தாயிரக்கணக்கானோரை அங்கிருந்து அகற்றி வசதிகள் செய்துகொடுக்க மொசாம்பிக் அரசு உதவி கோருகிறது.
ஒரு காலத்தில் தனது காலனியாக இருந்த மொசாம்பிக்குக்கு உதவ சுமார் 60 பயிற்சிபெற்ற அதிரடிப்படை வீரர்களை அனுப்பத் தயாராக இருப்பதாக போர்த்துக்கல் அறிவித்திருக்கிறது. மொசாம்பிக் அரசுக்குப் பொருளாதார ரீதியில் மிகவும் அவசியமான இயற்கைவாயுவை எடுக்கும் தளங்கள் பால்மா நகருக்கு அருகிலேயே இருக்கின்றன. அங்கே இயங்கிய பிரெஞ்ச் நிறுவனமான டொட்டால் உட்பட்ட வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தமது வேலைகளைக் கைவிட்டுவிட்டன.
பால்மாவை மீண்டும் கைப்பற்றித் தனது வருமானத்துக்கு அவசியமான குறிப்பிட்ட இயற்கை வளங்களில் வேலைசெய்வோருக்குப் பாதுகாப்புக் கொடுப்பது மொசாம்பிக் அரசுக்கு அவசியமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்