“எகிப்துக்குச் சொந்தமான ஒரு சொட்டு நீரை எவர் எடுத்தாலும், பிராந்தியமே ஸ்திரமில்லாது போகும்!” அல் – ஸிஸி, எகிப்து
மீண்டுமொரு முறை எச்சரிக்கிறார் எகிப்தி ஜனாதிபதி அப்துல் வதே அல் – ஸிஸி, எத்தியோப்பியாவை விலாசமிட்டு. சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட சரக்குக் கப்பல் விடுவிக்கப்பட்டுப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மீண்டுமொருமுறை கடுமையாகத் எகிப்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நைல் நதி உருவாகும் உயர்தளப்பகுதியிலிருக்கும் எத்தியோப்பியா தனது எல்லைக்குள் அதை மறித்து உருவாக்கியிருக்கும் ஆபிரிக்காவின் மிகப்பெரும் அணைக்கட்டில் நீர் சேகரிப்பதைப் பற்றியே எகிப்திய ஜனாதிபதி இவ்வெச்சரிக்கையை விட்டிருக்கிறார்.
எத்தியோப்பிய எல்லையைத் தாண்டிக் கீழ் நோக்கி வரும் நைல் நதியை நம்பி சூடானும் ஒரு பெரிய அணையைக் கட்டியிருக்கிறது. நைல் நதியின் நீர் அளவு குறைந்திருக்கும் சமயத்தில் எத்தியோப்பியா தனது அணைக்கட்டுக்கான முதலாவது கட்ட நீரை நிரப்பிவிட்டு, இரண்டாவதையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதால் எகிப்து, சூடான் ஆகிய இரண்டு நாடுகளுமே எத்தியோப்பியா மீது எரிச்சலைகின்றன.
சூடான் தனது அணைக்கான நீர் கிடைக்காது என்ற அஞ்சுவதால் எகிப்துடன் சேர்ந்து எத்தியோப்பியாவிடம் நீரை மறிப்பதைப் பின்போடும்படி கேட்டு வருகிறார்கள். அத்துடன், நைல் நதி நீருக்கான நீண்டகாலத் தீர்வொன்றையையும் இந்த நாடுகள் கோரி வருகின்றன. இதுவரை பிராந்திய, சர்வதேச அளவில் நடாத்தப்பட்ட நீர்ப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் எதிலும் எத்தியோப்பியா விட்டுக்கொடுக்கவில்லை.
“எத்தியோப்பியாவின் நடத்தை வெறுப்புக்குரியது. இதுவரை நாங்கள் யாரையும் இவ்விடயத்தில் சவால் விட்டு மிரட்டவில்லை. ஆனால், எகிப்தின் நைல் நதி நீரில் குறுக்கிடுவது தான் எங்கள் கோபத்தின் எல்லை,” என்கிறார் ஜனாதிபதி ஸிஸி.
சாள்ஸ் ஜெ. போமன்