குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 கொவிட் 19 நோயாளிகள் இறப்பு.
குஜராத் மாநிலத்தில் நலன்புரி அமைப்பொன்றால் நடாத்தப்பட்டுவரும் மருத்துவமனையில் சனியன்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு சிகிச்சை எடுத்துவந்த கொவிட் 19 நோயாளிகள் 18 பேர் அந்தத் தீவிபத்தில் மாட்டிக்கொண்டதால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.
ஒரு நாலு மாடிக் கட்டடத்தில் இயங்கிவந்த அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தின்போது தீயணைப்புப் படையினரும், சுற்றுப்பகுதியில் வாழ்ந்தவர்களும் உதவினார்கள். 12 நோயாளிகள் அங்கேயே இறந்துபோனார்கள். 6 பேர் மற்றைய கட்டடங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ மாற்றப்படும்போது இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அங்கே சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி இறந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாலு இலட்சம் ரூபாய்கள் நிவாரணமாகக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். நடந்த தீவிபத்தைப் பற்றி மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்துமென்று கூறிய முதலமைச்சர் இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்