இளம் கணவன்- மனைவி உட்பட ஐவருக்கு இந்திய திரிபு தொற்று.
பிரான்ஸ் வந்த சிங்கப்பூர் கப்பலின் 16 மாலுமிகளுக்கும் புதிய வைரஸ்?
பிரான்ஸில் நோர்மன்டியில் (Normandie) உள்ள லூ ஹாவ் (Le Havre) துறைமுகத்தில் தரித்து நிற்கும் சிங்கப்பூர் எண்ணொய்க் கப்பல் ஒன்றின் 16 மாலுமிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி அந்தக் கப்பலில் திடீரென நோய்வாய்ப்பட்ட இரண்டு மாலுமிகள் ஹெலிக்கொப்ரர் மூலம் மீட்கப்பட்டு நோர்மன்டி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அதன் பிறகே கப்பலில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
16 மாலுமிகளுக்கும் தொற்றிய வைரஸ் இந்தியத் திரிபாக இருக்கலாம் எனச்சந்தேகிக்கப்படுகிறது. அதை உறுதி செய்ய ஆழமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுவருவதாக நோர்மன்டி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார் என்று ஏஎப்பி செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை – பிரான்ஸில் இந்திய வைரஸ் (B.1.617 variant) தொற்றுக்கு இலக்காகியோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
நாட்டின் தென்மேற்கே Lot-et-Garonneமாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல்தொற்றாளரான பெண்ணின் கணவருக்கும் இந்திய வைரஸ் தொற்றியமை தெரியவந்துள்ளது. முப்பது வயதுடையஇவர்கள் இருவரும் கண்காணிப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பெண் கடந்த மார்ச் மாதம் இந்தியா சென்று திரும்பியிருந்தார்.
தென்மேற்கு நகரமான Bordeaux அருகேGirondin என்ற இடத்தில் மூன்றாவது தொற்றாளரான ஆண் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். அவர் தொழில் முறைப்பயணமாக இந்தியா சென்று விட்டுக்கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதியே நாடு திரும்பியிருந்தார். இவரது குடும்பத்தில் குழந்தை உட்பட நால்வருக்கு வைரஸ்தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
ஆனால் அது இந்திய வைரஸ்தானா என்ற மேலதிக ஆய்வு முடிவு வரும் திங்களன்றே தெரிய வரும்என்று Nouvelle-Aquitaine பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் வைரஸ் தொற்றிய மூவரும் இதுவரை வைரஸ் தடுப்பூசி எதனையும் ஏற்றிக்கொள்ளதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
Bouches-du-Rhôn
நாட்டின் தெற்கு கரையோரப் பிராந்தியமாகிய Bouches-du-Rhône பிரிவுக்குள்இந்தியாவில் இருந்து திரும்பிய வேறு இரண்டு பேருக்கும் இந்திய வைரஸ் தொற்றியுள்ளது. ஏப்ரல் 19, ஏப்ரல் 27திகதிகளில் கண்டறியப்பட்ட இவர்கள் இருவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களோடு தொடர்புடைய பலரும் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸின் பெரு நிலப் பரப்புக்கு வெளியே Guadeloupe தீவில் ஏற்கனவே இந்தியவைரஸ் தொற்றிய இருவர் கண்டறியப்பட்டிருந்தனர்.
இரண்டு வெவ்வேறு திரிபுகளின் குணவியல்புகளை தன்னகத்தே கொண்ட இந்திய வைரஸ், மனித உடலில் ஏற்கனவே உருவாகிய நோய் எதிர்ப்பு சக்தியிடம் இருந்தும், தடுப்பூசிகளிடம் இருந்தும் தப்பிவிடக்கூடிய தன்மைகொண்டது என அஞ்சப்படுகிறது. ஆனால் அதனை நிரூபிக்க மேலும் ஆய்வுகள் அவசியம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
பிரான்ஸில் இதுவரையான காலப்பகுதியில் இங்கிலாந்து திரிபு வைரஸ் காரணமாகவே மிக அதிக எண்ணிக்கையான(82 வீதம்) தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. பிறேசில், தென்னாபிரிக்கா போன்றதிரிபுகள் மிகக் குறைந்த அளவிலேயேபரவி உள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.