இந்தியாவில் நடந்த முக்கிய மாநிலத் தேர்தல்களில் தோற்றுப்போனது பா.ஜ.க.
தூங்குபவன் மீது கடும் குளிர் நீர் ஊற்றப்பட்ட உணர்வை மே 02 திகதி வெளியான இந்தியத் தேர்தல்களின் முடிவுகள் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு உண்டாக்கியிருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் மந்த நிலையிலேயே இருக்கிறது என்பதை ஒரு ஆறுதல் பரிசாக எடுத்துக்கொள்ளவேண்டியதான்.
பிரதமரான மோடியும், கட்சியின் முக்கிய மூளை என்று கருதப்படும் அமித் ஷாவும் தமது முக்கிய கவனத்தை ஒருமைப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்த மேற்கு வங்காளத்தில் மூன்றாவது தடவையும் திரிமூல் காங்கிரஸ் ஆட்சியை வென்றெடுத்திருக்கிறது. மம்தா பானர்ஜியின் ஆட்சி முஸ்லீம்கள் பரவவும், ரோஹிஞ்சா அகதிகளின் களவாக வந்து குடியேறவும் இடம்கொடுத்ததாகவும் விமர்சித்து அங்கே நீண்டகாலமாக ஒன்றாக வாழும் வெவ்வேறு இன, மதத்தவரிடையே குழப்பங்களை ஏற்படுத்த முற்பட்ட பாஜக-வின் தந்திரம் அங்கே பலிக்கவில்லை.
கேரளாவைப் பொறுத்தவரை பிரணாயி விஜயனின் தலைமையிலான இடதுசாரிகளின் ஜனநாயக முன்னணி மீண்டும் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த மாநிலத்து மக்கள் பாஜக-வின் இந்துமதப் பிரச்சார அரசியலைத் தோற்கடித்ததுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கும் பலமான அடியைக் கொடுத்திருக்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சி தன்னிடமிருந்த ஒரேயொரு இடத்தையும் இழந்து முழுசாகத் துடைந்தெறியப்பட்டிருக்கிறது.
தமிழகத் தேர்தல் இம்முறை மிகவும் வித்தியாசமானது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் எவருமின்றி நடந்த முதலாவது தேர்தல் இதுவாகும். 2019 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே மாநிலம் தன்வசப்படும் என்று நம்பிக்கையுடன், திட்டமிட்டுச் செயற்பட்ட ஸ்டாலினின் திமுக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. நீண்ட காலமாக ஆட்சியிலில்லாமலிருந்த அக்கட்சி அந்த மாநிலத்தில் நீண்ட காலத்தில் சந்தித்த படு தோல்விகளுக்குப் பின்னர் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. விளைவு பாஜக தனது குதிரையாகப் பாவித்த அஇஅதிமுக இத்தேர்தலில் திமுக கைப்பற்றியதை விட பாதியளவு இடங்களையே சட்டசபையில் கைப்பற்ற முடிந்திருக்கிறது. மட்டுமன்றி திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகவும் அதே நேரம் பாஜக-விடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள முயன்ற சிறிய கட்சிகளின் அணிகளும் தோல்வியடைந்திருக்கின்றன.
பாஜக மீண்டும் வென்றெடுத்திருக்கும் மாநிலம் அஸாம். இதுவும் மேற்கு வங்காளத்தைப் போன்று பங்களாதேஷின் எல்லையிலிருக்கும் ஒரு மாநிலமாகும். ஆனால், இந்தியாவின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையான சுமார் 90.4 மில்லியன் பேரைக் கொண்ட மேற்கு வங்காளம் போலன்றி சுமார் 30 மில்லியன் மக்களைக் கொண்டது. அஸாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றியடைந்திருந்தாலும் மூன்று இடங்களை இழந்திருக்கிறது. கடந்த தேர்தலுக்கு முன்னர் இங்கே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் எட்டு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியிருக்கிறது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாஜக மூன்று இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மொத்தமான 12 இடங்களில் ஒன்பது இடங்களை பாஜக-வின் கூட்டணியான தேசிய ஜனநாயக முன்னணி பெற்றிருக்கிறது.
நடந்த தேர்தல்களில் மம்தா பானர்ஜியைத் தமது முக்கிய எதிர்க்கட்சியாகச் சித்தரித்துத் தோல்வியடைந்ததால் சர்வதேச ரீதியில் பாஜக.வின் மேற்கு வங்காளத் தோல்வி பரவலாக பாஜக-வின் தோல்வியாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அதனால் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக மட்டும்தான் மாற முடிந்திருக்கிறது.
கொரோனாத் தொற்றுக்கள் மீண்டும் பரவ ஆரம்பித்த சமயத்தில் நடாத்தப்பட்ட இந்தத் தேர்தல்களின் வாக்கு வேட்டைக்காலம் முதல் வாக்களிப்புக்கள் வரை அவ்வியாதி மீண்டும் பரவ இடம் கொடுத்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் இச்சமயத்தில் இந்தியா இதுவரை காணாத அளவில் தொற்றுக்களையும், இறப்புக்களையும் சந்திப்பதுடன் நாட்டின் மக்கள் ஆரோக்கிய சேவை அதன் மீது பல கோணங்களிலுமிருந்தும் சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்புக்களால் திணறிக்கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே விழுந்துகொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவை, அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் கொரோனாக் காலத்தில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள், பொருளாதார வீழ்ச்சி போன்றவையும் பாதிக்கக்கூடும். அதே சமயம் தொடர்ந்தும் தேசிய ரீதியில் எந்த ஒரு கட்சியும் ஒரு பலமான எதிர்க்கட்சியாக உருவாகாமலிருப்பது பாஜக-வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் இருத்தலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்