சவூதி அரேபியாவின் நிலப்பரப்பில் காணப்படும் முஸ்தாத்தில்கள் பிரமிட்டுகளையும் விடப் பழமையானவை.
சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் பெரிய கற்களாலான ஆயிரத்துக்கும் அதிகமான கட்டட அமைப்புக்கள் காணப்படுகின்றன. வானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களிலும் தெரியும் இவை பெரிய கற்களைச் செவ்வக அமைப்பில் அடுக்கி வைக்கப்பட்டது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன. அதனால் அரபி மொழியில் செவ்வகம் என்ற பொருள்படும் முஸ்தாத்தில் என்று அழைக்கப்படுகின்றன.
1970 களிலேயே கவனிக்கப்பட்ட இவை பற்றி, நீண்ட காலமாகவே என்னவாக இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தார்கள். அவைதான் எமக்குத் தெரிந்து முதல் முதலாக மனிதர்களால் கட்டப்பட்ட ஞாபகச் சின்னங்கள் என்று அவ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவைகள் கட்டப்பட்ட காலம் 7,000 வருடங்களுக்கும் அதிகமானது என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தில் காணப்படும் ஸ்டோன்ஹெஞ்ச் என்றழைக்கப்படும் கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட பண்டைக்கால சின்னங்களோ, எமக்குத் தெரிந்த மிகப் பழைய பிரமிட்டுகளோ கூட இந்த முஸ்தாத்தில்களை விட வயதில் இளமையானவையே என்கிறது வெளியிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை. சவூதி அரேபியாவில் காணப்படும் இவ்வமைப்புகள் அவைகளை விடச் சுமார் 2,000 வருடங்கள் பழமையானவை.
ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்தாத்தில்கள் சுமார் 200,000 சதுர கி.மீற்றர் பரப்பளவுக்குள் காணப்படுகின்றன. இவைகளின் நீளம் 20 முதல் 620 மீற்றர் அளவாக, கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் இருக்கின்றன. மேற்கு ஆஸ்ரேலியாவின் பல்கலைக்கழகத்தினரின் விமானப் படங்களின் உதவியாலான பழங்கால அமைப்புக்களின் ஆராய்ச்சி மூலமே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
மனிதர்கள் எதற்காக இந்தச் சின்னங்களை அமைத்தார்கள் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில்கள் எதுவும் இல்லை. ஆனாலும், இவை ஒரே பிராந்தியத்தில், கிட்டத்தட்ட ஒரே அமைப்புகளாகக் கட்டப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட ஒரு விதமான நம்பிக்கையைக் கொண்டவர்களால் உண்டாக்கப்பட்டிருக்கவேண்டும், என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மெலிஸ்ஸா கென்னடி.
சாள்ஸ் ஜெ. போமன்