எவ்வளவுதான் படித்துக் கிழித்தாலும் வயதாகும்போது மூளை சுருங்குதல் குறைவதில்லை.
ஒரு மனிதருக்கு வயதாகும்போது அவரது மூளையின் அளவு சுருங்குகிறது, அதனால் அதன் கொள்ளளவு குறைகிறது என்பது நீண்ட காலமாகவே அறியப்பட்ட உண்மையாகும். ஆனால், நீண்டகால உயர்கல்வியால் அதை மாற்றமுடியுமா, என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நீண்ட காலமாக வெவ்வேறு துறை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்துவந்தது. ஆனால், ஒரு சர்வதேச ஆராய்ச்சி “படித்தவர், படிக்காதவர்கள் எல்லோருக்குமே மூளை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சுருங்க ஆரம்பிக்கிறது. அந்த மாற்றம் இயல்பாக நடக்கிறது, அதைக் கல்வியறிவால் நிறுத்த முடியாது,” என்று குறிப்பிடுகிறது.
மூளையின் கொள்ளளவு குறையும்போது ஞாபகங்களுக்காகச் செயற்படும் அதன் முக்கியமான பகுதிகளே சுருங்குகின்றன. எனவே வயதாகும்போது எங்கள் ஞாபகசக்தி குறைவதைத் தடுக்க முடியாது என்கிறது அவ்வாராய்ச்சி. அத்துடன் அம்மாற்றத்தின் வேகத்தையும் மாற்ற முடியாது என்று தெரிகிறது.
குறிப்பிட்ட ஆராய்ச்சிக்காக 29 வயது முதல் 90 வயதான 2,000 பேரின் மூளைகள் பரிசீலிக்கப்பட்டன. அவர்களுடைய கல்வி பற்ற விபரங்கள், மூளையின் அளவு, மாற்றங்கள் போன்றவை அளவெடுக்கப்பட்டுப் பரிசீலிக்கப்படு வெவ்வேறு விதமான ஒப்பீடுகள் நடாத்தப்பட்டன. அவைகளின் மூலமே இந்த ஆராய்ச்சிக் குழுவினர் “மூளையின் சுருங்குதலைக் கல்வியறிவால் மாற்றமுடியாது,” என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
பரீட்சிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இளவயதிலிருந்தே மூளையின் சில பாகங்களின் அளவு வித்தியாசமாக இருந்தது. அவை அவர்களின் மரபணுக்களைப் பொறுத்ததாக இருக்கலாம். ஆனால், விகிதாசார அளவில் அவைகளின் வயதாகுதலும் சுருங்குதலும் எல்லோருக்கும் இருப்பதைப் போலவே இருக்கிறது.
ஆனால், மனித வாழ்வில் ஏற்படும் மன உழைச்சல்கள், அதிக இரத்த வியாதி, உடல் பயிற்சியின்மை, தனிமையால் வாடுதல், சமூக விலகல் வாழ்க்கை ஆகியவை எங்களுடைய மூளையின் வயதாகுதலையும், சுருங்குதலையும் வேகமாக்கலாம் என்று தெரிவதாக இந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்