மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா?

மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான அவர், தான் போட்டியிட்ட தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போயிருக்கிறார். ஆனாலும், மம்தாவின் கட்சியின் அபாரமான வெற்றிக்குக் காரணம் அவரது தேர்தல் பிரச்சார வியூகத் திறமையே என்று இந்தியாவிலும், சர்வதேசத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. 

முன்பும் இதேபோன்று வெவ்வேறு மாநில எதிர்க்கட்சிகள் செய்துத் தோற்றுப்போன முயற்சியான “மாநில எதிர்க்கட்சிகளை இணைத்து மத்தியின் பலமான கட்சிக்கெதிராக ஒற்றைக் கூட்டணி அமைத்தல்” ஆசை இப்போது மம்தாவுக்கும் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அது பற்றி அவரிடம் கேள்விகளும் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

 “நான் வீதியில் இறங்கிப் போராடும் போராளி. எல்லாவற்றையும் நான் ஒற்றையாளாகச் செய்து முடிக்க இயலாது. மற்றவர்களும் ஒன்று கூடவேண்டும். நாம் 2024 இல் பாஜக-வுக்கு எதிர்ச் சக்தியாக உருவெடுக்க வேண்டும். இப்போது கொவிட் 19 ஐ வெல்வது முதலாவது அவசியமாக இருக்கிறது. அதன் பின் பார்க்கலாம்,” என்று மம்தா அக்கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். 

நாட்டு மக்களெல்லாருக்கும் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்றும், தவறினால் தான் அதையெதிர்த்துப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். “இந்திய மக்களெல்லாருக்கும் இலவசத் தடுப்பு மருந்துகள் கொடுக்க சுமார் 30 கோடிகள் செலவழிக்கும் வசதி மத்திய அரசிடம்  இருக்கிறது. அவர்கள் தேர்தலில் என்னை வெல்வதற்குச் செலவழித்ததில் ஒரு பகுதி தொகையே அதற்குப் போதுமானதாக இருக்கும்,” என்கிறார் மம்தா.

தேர்தல் முடிவுகள் வரமுன்னரே மம்தா இந்தியாவின் மாநிலக் கட்சிகளுக்குக் கடிதங்கள் எழுதி 2024 ம் ஆண்டுத் தேர்தலில் ஓரணியாகச் சேர்வது பற்றிப் பேச ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. 

 சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *