இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது தயாரிப்புக்களை நிறுவி 6,500 பிரிட்டர்களுக்கு வேலை கொடுக்கப்போகிறது.
இந்திய – பிரிட்டன் கூட்டுத் திட்டங்களிலொன்றாக பிரிட்டனில் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளைச் செய்யவிருக்கிறது செரும் இன்ஸ்டிடியூட். தொலைத்தொடர்புகள் மூலம் பிரிட்டிஷ் பிரதமரும், இந்தியப் பிரதமரும் பேசிக்கொண்டபின்னர் இந்த அறிவிப்பு பிரிட்டனில் வெளியாகியிருக்கிறது.
ஆரோக்கியப் பொருட்கள், மென்பொருட்கள், மருந்துத் தயாரிப்புக்கள் உட்பட்ட துறைகளைச் சேர்ந்த 20 இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் காலூன்றுவதற்காக இரண்டு நாடுகளின் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவைகளிலொன்றாக செரும் இன்ஸ்ட்டிடியூட்டின் அலுவலகமும், தயாரிப்பு அமைப்புக்களும் பிரிட்டனில் நிறுவப்படவிருக்கின்றன என்று அதார் பூனவாலா தெரிவித்தார்.
பிரிட்டனில் தனது நிறுவனம் செய்யும் முதலீடுகள் மூலமாக மேலும் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான வியாபாரங்களைத் தமது துறையில் பிரிட்டனில் ஸ்தாபிக்க முடியும் என்றார் பூனவாலா. அவைகள் மூலம் தனது நிறுவனம் பிரிட்டனின் மருந்து ஆராய்ச்சிகள், பரிசீலனைகள், தயாரிப்புக்களில் காலூன்றி உலகச் சந்தையில் விற்பனை செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குளோபல் ஜீன், கியூ ரிச், மஸ்கெக் கிரியேஷன், வீ புரோ, ஸ்டெர்லைட் டெக்னலொஜி உட்பட மொத்தமாகச் சேர்ந்து மேலும் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளை பிரிட்டனில் செய்து அங்கு மேலும் 6,500 வேலைவாய்ப்புக்களை உண்டாக்குவதாக பிரிட்டிஷ் பிரதமரின் காரியாலயம் அறிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்