“எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும் இந்தியாவை மூன்றாவதாக ஒரு கொரோனாத் தொற்று அலை தாக்குவதைத் தவிர்க்க இயலாது!”

புதனன்று ஒரு நாள் கொவிட் 19 இறப்புக்களாக 3,980 ஐ இந்தியா காணும் அதே சமயம் மத்திய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல்களில் ஆலோசனை கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர் கே.விஜய் ராகவன், “நாம் கால அட்டவணையைத் தெளிவாகக் குறிப்பிட முடியாவிட்டாலும் கூட மூன்றாவதாக மேலுமொரு தொற்று அலை வருவது நிச்சயம். நாம் அதை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும்,” என்று எச்சரித்திருக்கிறார்.

நடு நிசியில் துயிலெழுப்பப்பட்டது போல இந்திய அரசு உண்டாகியிருக்கும் இரண்டாவது கொரோனாத் தொற்று அலையை எதிர்கொள்ள இயலாமல் தத்தளிக்கிறது. கடந்த வாரத்தில் உலகில் பதியப்பட்ட கொரோனாத் தொற்று எண்ணிக்கையில் பாதியளவு இந்தியாவிலேயே ஏற்பட்டது. அதே சமயம் இந்தியாவின் தொற்றுக்கள், இறப்புக்கள் ஆகியவையின் எண்ணிக்கை வெளிப்படுத்தப்படும் எண்ணிக்கையை விட 5 – 10 மடங்கு அதிகமாகும் என்று குறிப்பிடுகின்றது இந்திய மருத்துவ சேவை வட்டாரங்கள். 

நரேந்திர மோடியின் அரசு சரியான காலத்தில், சரியான நடவடிக்கைகளை எடுக்காததாலேயே நிலமை இத்தனை மோசமாகியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சிகளிடமிருந்தும், வேறு பல திசைகளிலிருந்தும் நாட்டில் பொது முடக்கத்தைக் கொண்டுவரும்படி குரல்கள் எழுப்பப்படுகின்றன. உடனடியாக அப்படியொரு முடிவுக்கான திட்டம் இல்லையெனிலும் அதுவும் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றன அரசியல், மருத்துவ சேவை வட்டாரங்கள். 

வியாழனன்று காலை  வெளிப்படுத்தப்பட்ட இலக்கங்களுடன் சேர்ந்து இதுவரை 2,30,180 பேர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள். வியாழனன்று 4,12,262 பேருக்குக்குப் புதியதாகத் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. உலகில் எந்த ஒரு நாடும் ஒரே நாளில் இத்தனை அதிகமான தொற்றுக்களை அறிவித்திருக்கவில்லை. இந்தியாவின் பிரபல சுற்றுலா மாநிலமான கோவா ஒரு கொரோனாத் தொற்று மையமாகி அங்கே பரிசோதிக்கப்படுகிறவர்களில் இருவரில் ஒருவருக்குத் தொற்று உண்டாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கே.விஜய் ராகவன் தொடர்ந்து “கொரோனாக் கிருமிகளில் மேலும் பல திரிபுகள் இந்தியாவிலும், உலகின் வெவ்வேறு பாகங்களில் தொடர்ந்தும் உண்டாகும். ஆனால், நாம் தடுப்பு மருந்து கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது வேகமாகப் பரவும் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும்,” என்று குறிப்பிட்டார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *