அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய அமெரிக்க ஜனாதிபதி 62,500 அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை அமெரிக்கா ஒக்டோபர் முதலாம் திகதிவரை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார்.
“வருடத்துக்கு 15,000 என்ற எண்ணிக்கை அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஒப்பானதல்ல. புதிய வாழ்க்கையொன்றை ஆரம்பிக்க உலகெங்கும் காத்திருப்பவர்களைக் கைவிடும் நாடாக அமெரிக்கா இருக்கலாகாது,” என்று இதுபற்றிய ஜோ பைடனின் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஏப்ரல் மாதம் வரை 15,000 ஆகவே இருக்கும் என்று எடுக்கப்பட்ட முடிவு டெமொகிரடிக் கட்சியினர் பலரின் எதிர்ப்புக்களினால் மாற்றப்பட்டிருக்கின்றது. எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் குறிப்பிட்ட அந்தத் தொகையை நிறைவுசெய்யுமளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்கிறார்கள் வெள்ளை மாளிகை அதிகாரிகள்.
ஜோ பைடனின் முதலாவது நூறு நாட்கள் பற்றிய கணிப்பீடுகளில் அவர் கணிசமான ஆதரவு பெற்றிருக்கிறார். அதற்காகக் கேட்கப்பட்ட கேள்விகளில் அவர் எந்த விடயத்தில் பலவீனமாக இருக்கிறார், எதை மோசமாகக் கையாள்கிறார் என்பதற்கு 60 விகிதமானோர் அமெரிக்காவில் தஞ்சம் புக வருகிறவர்கள் பற்றிய முடிவுகள் என்று பதிலளித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்