கம்போடியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் மனிதத்தனமில்லாதவை என்று விமர்சிக்கப்படுகின்றன.
சமீப வாரங்களில் மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனாத்தொற்றுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கம்போடிய அரசு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிகப்புப் பிராந்தியங்களில் வாழ்பவர்கள் கட்டாயமாக மருத்துவரை நாடுவது போன்ற தேவையின்றி எவரும் வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களெதையும் அரசு விநியோகிக்கவில்லை.
நாட்டு மக்களுக்கான அவசிய பொருட்களை வழங்குவதாகத் உறுதி கூறியிருந்த அரசு அதைச் செய்யாததால் நாட்டின் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்குகிறார்கள். உடனடியாக மக்களுக்கான அவசியப் பொருட்களை வழங்கும்படி ஐ.நா கம்போடியாவைக் கோருகிறது. பல மனித உரிமை அமைப்புக்களும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கொரோனாச் சட்டங்கள் அநியாயமானவை என்று விமர்சிக்கிறார்கள்.
நாட்டின் தலைநகரான புனம் பென்னில் மக்கள் தமக்கான அன்றாடத் தேவைக்கான பொருட்களை வழங்கும்படி அரசை வேண்டுகிறார்கள். கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகர்ப்பகுதிகளுக்கு எவரும் போகமுடியாது, உள்ளிருப்போரும் வெளியே வரமுடியாது என்பதைத் தவிர அங்கேயுள்ள நிலைமையை வெளியே பரப்புவது, எழுதுவது போன்றவையும் குற்றமென்று அரசு கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது.
அது தவிர நகரின் ஒரு பகுதியில் வாழ்பவர்கள் இன்னொரு பகுதிக்குப் போகமுடியாமல் தடைகள் போடப்பட்டிருக்கின்றன. இன்னொரு பகுதிக்கு போக வேண்டியவர்கள் ஒவ்வொரு தடையிலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அப்படியான தடைகளை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே நூறுக்கு மேற்பட்டவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்