கூட்டு எதிர்ப்புச் சக்தியை எட்டியகுட்டி நாட்டில் மீண்டும் தொற்று!முடக்கப்படுகிறது சீஷெல்ஸ் தீவு.

இந்து சமுத்திரத்தில் தீவுக் கூட்டங்களை
உள்ளடக்கிய சீஷெல்ஸ் (Seychelles) என்ற குட்டி நாட்டில் மீண்டும் நூற்றுக் கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப் பட்டதை அடுத்து அந்நாட்டின் அரசு புதிதாகக் கட்டுப்பாடுகளை அறிவித் துள்ளது.

பாடசாலைகள், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன மூன்று வாரகால தத்துக்கு மூடப்பட்டுள்ளளன.

அறுபதுக்கும் அதிக வீதம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிய முதல் நாடு-, மக்களிடையே கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி (collective immunity) உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பினால் கணிக்கப்பட்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்த சீஷெல்ஸின் மொத்த சனத் தொகை சுமார் ஒரு லட்சம் ஆகும். தொற்று நோயில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த அங்கு கடந்த சில நாட்களில் மூன்றாவது அலையாக 500 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சீஷெல்ஸ் போன்ற சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகள் இலகுவில் விரைவாகத் தமது மக்களுக்குத் தடுப் பூசியை ஏற்றிக்கொள்ள முடிவதால் அவை தொற்று நோயில் இருந்து முதலில் விடுபடுகின்ற நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து விடுகின்றன.
ஆனால் சீஷெல்ஸ் நிலைவரம் அதனைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பொதுவாகத் தொற்று நோய்களைக் கூட்டாக எதிர்க்கின்ற காப்பு சக்தி என்பது சனத்தொகையில் 60,70 வீதமானோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்கின்ற போது உருவாகி விடும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பு. சீனா அன்பளிப்பாக வழங்கிய தடுப்பூசி சீஷெல்ஸ் நாட்டில் 66வீதம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. அஸ்ராஸெனகா மற்றும் சீனாவின் “சினொபார்ம்”
(Sinopharm) ஆகிய தடுப்பூசிகளே அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரு தடுப்பூசிகளும் தென்னா பிரிக்காவில் தோன்றிய வைரஸ் திரிபை எதிர்க்கும் திறன் குறைந்தவை என்று சில ஆய்வுகள் வெளியாகி இருந்தன. சீஷெல்ஸ் நாட்டில் தென்னாபிரிக்கத் திரிபு வைரஸே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூட்டான், இலங்கை போன்ற இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடுகள் பலவற்றில் சீனா மற்றும் இங்கிலாந்து
தயாரிப்பு ஊசிகளே பயன்பாட்டில் உள்ளன. எனவே அங்கெல்லாம் கூட்டுநோய் எதிர்ப்புச் சக்தியைக் கணிப்பீடு செய்வதில் சில ஐயங்களை சீஷெல்ஸ் நிலைவரம் உருவாக்கி இருக்கிறது.

பிரித்தானியாவின் முன்னாள் குடியேற்ற நாடான சீஷெல்ஸில் இந்துக்கள் உட்பட பல்லின, மத சமூகத்தினர் வாழ்கின்ற னர்.


– பாரிஸிலிருந்து குமாரதாஸன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *