1988 க்குப் பின்னர் மீண்டும் பெருமளவில் காட்டு யானைகளைக் கொன்று அவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணுகிறது ஸிம்பாவ்வே.

நாட்டிலிருக்கும் மிகப்பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கை இயற்கை வளங்களை மற்றைய தேவைகளுக்குப் போதாமல் செய்கின்றன என்கிறது ஸிம்பாவ்வே. பொட்ஸ்வானாவுக்கு அடுத்ததாக உலகில் அதிக எண்ணிக்கையில் காட்டு யானைகளைக் கொண்ட நாடு ஸிம்பாவ்வே. அந்த நாட்டில் 100,000 காட்டு யானைகள் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. 

மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்குமான இயற்கை வளங்களுக்கான போட்டி, மற்றைய காட்டு மிருகங்களுக்கு இயற்கையில் மேலும் இடம் தேவைப்படுதல் ஆகியவைகளை ஸிம்பாவ்வேயின் சுற்றுலா, சூழல் பாதுகாப்பு ஆகியவைகளின் அமைச்சர் மங்கலிஸோ டுலோவு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வளர்ந்த யானையும் சராசரியாகத் தினசரி 300 கிலோ தாவரங்களை உண்பதுடன் அதற்கான மரங்களைக் காயப்படுத்தியும் அழித்தும் வருகின்றன.  அதனால் காடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார் அவர்.

சர்வதேச ரீதியில் காட்டு யானைகளின் மொத்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், ஆபிரிக்காவின் தெற்கிலுள்ள நாடுகளில் அவைகளின் எண்ணிக்கை கடந்த கால் நூற்றாண்டுகளாக அதிகரித்திருக்கிறது. அதனாலேயே ஸிம்பாவ்வே இந்த எண்ணத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. 

 உகண்டா, ஸாம்பியா, தென்னாபிரிக்கா, ஸிம்பாவ்வே ஆகிய நாடுகள் தமது காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எண்ணத்துடன் வெவ்வேறு சமயங்களில் ஆயிரக்கணக்கில் யானைகளைக் கொன்றிருக்கின்றன. ஸிம்பாவ்வே மட்டும் 1965 – 1988 ம் ஆண்டுக்குள் வெவ்வேறு சமயங்களில் 50,000 காட்டு யானைகளைக் கொன்றிருக்கிறது. 

 யானைகளை மீண்டும் கொல்வதென்பதைப் பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படாவிட்டாலும் அதுபற்றிய ஆலோசனையை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து வருவதாக ஸிம்பாவ்வேயின் அமைச்சர் தெரிவிக்கிறார். 

 சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *