ருமேனியாவின் மிகப்பெரிய கரடியைக் கொன்றதாக லீச்சன்ஸ்டைன் அரசகுமாரனொருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
ஆஸ்திரியாவில் வாழும் பிரபு எம்மானுவேல் என்பவர் ருமேனியாவின் மிகப்பெரிய கரடியான ஆர்தரை வேட்டையாடிக் கொன்றுவிட்டதாக ருமேனியாவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. 17 வயதான அந்தக் கரடியைக் கொல்ல எம்மானுவேல் சுமார் 8,400 டொலர்கள் கட்டணம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவாஸ்னா என்ற நகர்ப்பகுதியில் அந்தக் கரடியைக் கடந்த மாதத்தில் சுட்டுக் கொன்றிருக்கிறார் எம்மானுவேல். அப்பகுதி விவசாயி ஒருவர் தனது விளைச்சலை குட்டிகளுடன் திரியும் ஒரு தாய்க் கரடி அழிக்கிறது என்று கொடுத்த புகாரின் பேரில் அந்தத் தாய்க் கரடியைச் சுடவே அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், எம்மானுவேல் ஆர்தரைக் கொன்றுவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதுபற்றி விசாரணைகள் நடாத்தவிருப்பதாக ருமேனியாவின் சுற்றுப்புற சூழல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட அரசகுமாரன் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
ஐரோப்பாவிலேயே அதிக எண்ணிக்கையில் பழுப்பு நிறக் கரடிகள் ருமேனியாவில் வாழ்கின்றன. அவைகளைக் கொல்வது சட்ட விரோதமானது. அவைகள் விவசாயிகளுக்கு நேரடியாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் மட்டுமே சூழல் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் அவைகளைக் கொல்ல அனுமதி கொடுக்கப்படும்.
6,000 பழுப்பு நிறக் கரடிகள் ருமேனியாவின் காடுகளில் வாழ்வதாக உத்தியோகபூர்வமான கணக்குத் தெரிவிக்கிறது. உண்மையில் ருமேனிய அரசுக்கு அங்கிருக்கும் கரடிகளின் எண்ணிக்கை பற்றித் தெரியாது. சுமார் 2,000 மட்டுமே மீதமிருக்கின்றன என்று குறிப்பிடுகிறார்கள் சுற்றுப்புற சூழல் மேம்பாட்டில் ஆர்வமுள்ள அமைப்புக்கள். வேட்டையாடுவதில் ஆர்வமுள்ளவர்களின் அமைப்போ 10,000 பழுப்பு நிறக் கரடிகள் அங்கே வாழ்வதாகக் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்