பிரான்ஸில் இலங்கையருக்கும் இனி கட்டாய தனிமைப்படுத்தல் – புதிதாக ஏழு நாடுகள் சேர்ப்பு.
இலங்கையில் இருந்து பிரான்ஸ் வருகின்ற பயணிகள் அனைவரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவர்.
தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்பட வேண்டிய பயணிகளது பட்டியலில் புதிதாக இலங்கை உட்பட ஏழு நாடுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன ஏனைய நாடுகள் ஆகும். இந்நாடுகளில் புதிய மாறுதலடைந்த வைரஸ்
திரிபுகள் வேகமாகப் பரவி வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா, பிறேசில், தென்னாபிரிக்கா, ஆஜென்ரீனா, சிலி போன்ற நாடுகளது பயணிகளுக்குக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற விதிகள் இந்த நாடுகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையர்கள் உட்பட இந்த நாடுகளில் இருந்து வருவோர் பயணத்துக்கு முன்னர் 36 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்ட வைரஸ் பரிசோதனை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதும் கட்டாயம் ஆகும். அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளுக்கு இணங்க வேண்டும். மீறினால் ஆயிரம் ஈரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும்.
தனிமைப்படுத்தப்படும் நாட்களில் வெளியே செல்வதற்கு தினமும் பகல் 10-12 மணிக்கு இடையே அனுமதிக்கப்படும். பொலீஸார் அதனைக் கண்காணிப்பர்.
குமாரதாஸன். பாரிஸ்.