துனீசியத் துறைமுகத்தில் இத்தாலியக் குப்பைகளுடன் கப்பல்.
இத்தாலியிலிருந்து துனீசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 300 கொள்கலங்கள் நிறைந்த குப்பைகளை நாட்டுக்குள் எடுக்கக்கூடாதென்று துனீசியா முடிவெடுத்திருக்கிறது. அக்குப்பைகள் தொடர்ந்தும் துறைமுகத்தில் கிடக்கின்றன.
சட்டபூர்வமான அனுமதிகளின்றிச் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் துனீசியாவில் மீள்பாவிப்புக்கு மாற்றப்படவேண்டுமென்ற திட்டத்துடன் இக்குப்பைகளை இத்தாலிய நிறுவனமொன்று எடுத்துச் சென்றது. துறைமுக நகரான சௌஸில் சுங்க அதிகாரிகள் அக்குப்பைகளை துனீசிய நாட்டுக்குள் எடுத்துவர நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்காது என்று கப்பலிலிருந்து அவைகளை இறக்குவதைத் தடுத்துவிட்டனர்.
துனீசிய அரசு இதை இத்தாலிக்கு அறிவித்துக் குறிப்பிட்ட நிறுவனம் அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டது. இத்தாலிய அரசு குப்பைகளைத் துனீசியாவுக்கு அனுப்ப முயன்ற நிறுவனத்திடம் அக்கப்பலைத் திரும்பவும் இத்தாலிக்குக் கொண்டுவரவேண்டும் என்று உத்தரவிட்டுப் பல மாதங்களாகின்றன.
துனீசிய அரசின் விசாரணைகளிலிருந்து இப்படியான சட்டத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்கு லஞ்ச ஊழல்களே காரணமென்று தெரிகிறது. நாட்டின் சூழல் அமைச்சர் முஸ்தபா அருயியைத் துனீசிய அரசு பதவியை விட்டு வெளியேற்றியிருக்கிறது.
துனீசிய நிறுவனமொன்றுடன் இத்தாலியக் குப்பைகளை எடுத்துவருவதற்காக Sviluppo Risorse Ambientali Srl என்ற இத்தாலிய நிறூவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதன்படி சுமார் 120,000 தொன் குப்பைகளைத் துனிசியாவுக்கு ஒரு தொன் குப்பைக்கு 59 டொலர்கள் என்ற விலைக்கு எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
துனீசியாவில் குறிப்பிட்ட நகரின் துறைமுகத்தில் தொடர்ந்தும் நிற்கும் கப்பலை அகற்றுமாறு துனீசியர்கள் அடிக்கடி போராட்டங்கள் நடாத்தி வருகிறார்கள். அவர்கள் நாட்டின் இத்தாலிய தூதுவராலயத்தின் முன்னும் எதிர்ப்புப் போராட்டம் நடாத்திக் “குப்பைகளைத் திருப்பியெடு,” என்று கோஷமிட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்