சிசிலியில் மாபியா இயக்கத்தால் கொல்லப்பட்ட நீதிபதி அங்கிருக்கும் தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
ரொசாரியோ லிவதீனோ அக்ரியெண்டோ என்ற சிசிலியின் நகரில் 1990 கொல்லப்பட்டது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. கத்தோலிக்க சமயத்தில் ஆழமான நம்பிக்கைகொண்ட ரொசாரியோ இத்தாலியின் பெரிய குற்றவாளிக் குழுக்களான மாபியாக்களை நீதியின் முன்னே நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்று போராடிய நீதிபதிகளில் ஒருவராகும். 38 வயதான அவர் கொலை செய்யப்பட்டு வீட்டினருகே ஒரு குழிக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்.
மே 9 ம் திகதி ஞாயிறன்று ரொசாரியோவை “நீதியின் போராளி” என்று குறிப்பிட்டு நீதிபதிகள் ஒவ்வொருவரும் அவரைப் போலக் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டுமென்று பாப்பரசர் பிரான்சீஸ் வேண்டிக்கொண்டார். சிசிலியிலிருக்கும் அக்ரிஜென்ரோ தேவாலயத்தில் ரொசாரியோவியைப் புகழ்ந்து பேசியதுடன் அவர் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பிரகடனம் செய்தார்.
மாபியாக் குழுக்களுக்கு எதிராகப் பல குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஒரேயடியாக நீதிமன்றத்தில் கொண்டுவந்து வழக்கு நடத்தினார் ரொசாரியோ. அவரது கொலைக்குக் காரணமென்று குறிப்பிட்டு கொசா நொன்ஸ்டிரா, சிட்டா என்ற இரு மாபியா குழு உறுப்பினர்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள்.
கத்தோலிக்க சமயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராகப் பிரகடனப்படுத்துவது என்பது அந்த நபரைப் பின்னர் புனிதராகப் பிரகடனப்படுத்துவதற்கு ஒரு படியாகும். சாதாரணமாகப் புனிதராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்த நபரின் பெயரால் அதிசயங்கள் நடந்திருக்கவேண்டும். ஆனால், குறிப்பிட்ட ஒரு விடயத்தில் போராளி என்று அறிவிக்கப்பட்டவர் பெயரில் அதிசயங்கள் நடந்திருக்காவிட்டாலும் அவரை வத்திக்கான் புனிதராக்கலாம்.
ரொசாரியோ “நீதியை நிலைநாட்டுவதற்காகப் போராடி உயிரை விட்டவரென்று,” முன்னாள் பாப்பரசர் யோஹான்னஸ் பவுலோஸ் II ம் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்