தத்தார்ஸ்தானின் தலை நகரில் பாடசாலையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் பலி.
ரஷ்யாவிலிருக்கும் தத்தார்ஸ்தானின் தலைநகரான கஸானில் இன்று இரண்டு பேர் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகத் தெரியவருகிறது. அந்தத் தாக்குதல்களில் ஏழு பேர் இறந்திருப்பதாகச் சில ரஷ்ய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வேறு சில செய்திகள் வேறு இலக்கங்களை இறந்தவர்களாக குறிப்பிட்டாலும் பலர் இறந்திருப்பதாகவும் அதைவிட அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இல்னாஸ் கலியாவியேவ் என்ற பத்தொன்பது வயது மாணவனும் இன்னொருவரும் சேர்ந்து உயர்தர வகுப்புப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மீது செவ்வாயன்று காலை துப்பாக்கிச் சூடு நடாத்தியிருக்கிறார்கள். அந்த இடத்துக்கு விரைந்த பொலீசார் இஸ்னாஸைக் கைது செய்ததுடன் அவனது கூட்டாளியைச் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. வேறு சில செய்திகள் இரண்டாவது குற்றவாளி பாடசாலையின் மூன்றாவது மாடியில் தொடர்ந்தும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவசரகால உதவிக்கான பொலீஸ் படையொன்று அப்பாடசாலையையொட்டி அலுவலகமொன்றை அமைத்துச் செயற்பட்டு வருகிறது. அவசரகால நோயாளிகளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் பாடசாலையருகில் காத்து நிற்கின்றன. நிலைமை தொடர்ந்தும் பதட்டமாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இறந்தவர்களில் மூன்று பேர் மாணவர்கள், நால்வர் பெண்கள் என்று தத்தார்ஸ்தான் ஆளுனர் தெரிவித்திருக்கிறார். ஆனால், கஸான் நகர மருத்துவ சேவையினர் பதினொன்று முதல் பதினேழு பேர் வரை இறந்திருப்பதாகச் சொல்லும் ஊடகங்களும் உண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்