இஸ்ராயேல் – பாலஸ்தீன மோதல் இஸ்ராயேலில் மீண்டுமொரு தேர்தலுக்கு வழிவகுக்கலாம்.
இஸ்ராயேலின் அரசியல் மைதானத்தை ஒழுங்குசெய்து பாராளுமன்றப் பெரும்பான்மையை உண்டாக்கி ஒரு அரசை அமைப்பது இரண்டு வருடங்களாகவே குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. அதனால், பெரும்பாலானவர்கள் “போதும், போதும் நத்தான்யாஹு” என்று சொல்லிக்கொண்டபோதும் அவர் ஏதாவது ஒரு வழியில் வெவ்வேறு சிறு கட்சிகளை ஒன்று கோர்த்து அரசாங்கம் என்கிற சட்டையைப் பின்னிக்கொள்வதில் வெற்றியடைந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த தேர்தலின் பின்னும் எவராலும் ஆரம்பக்கட்டத்தில் அரசாங்கத்தை உண்டாக்க முடியாத நிலைமையில் நத்தான்யாஹுவுக்கு அரசமைக்கும்படி கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களாக நடப்பதுபோல அவரால் ஒரு அரசாங்கத்தை உண்டாக்க முடியவில்லை. எனவே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இன்னொரு கட்சியிடம் விடப்பட்டது. சிறிய கட்சியான அது மேலுமொரு கட்சியுடன் சேர்ந்து, இஸ்ராயேலின் அராபியர்களின் கட்சியையும் இணைத்து அரசமைக்க வாய்ப்பு இருந்ததாக நம்பப்பட்டது.
இஸ்ராயேல் – பாலஸ்தீன மோதல்கள் இஸ்ராயேலுக்குள்ளும் பல இடங்களில் கொதிக்க ஆரம்பித்து உள்நாட்டுப் போர் மூளுமா என்ற நிலைமை உண்டாகியிருக்கிறது. நாட்டின் 21 விகிதமான அராபியர்களின் கட்சி முதல் தடவையாக தாம் யூதர்களுடன் சேர்ந்து ஒரு அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இஸ்ராயேலின் அரசியல் கட்சிகள் இரண்டின் தலைவர்களான பென்னட், லபிட் ஆகியோர் அராபியக் கட்சித் தலைவரான மன்சூர் அப்பாஸுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயாராக இருந்தது இஸ்ராயேலின் சரித்திரத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக யூதப் பழமைவாதிகளுடன் சேர்ந்து அரசமைப்பதால் நத்தான்யாஹுவுக்கு பாலஸ்தீனர்களின் பிரச்சினைகளை நேர்மையுடன் எதிர்கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக இஸ்ராயேலுக்குள் யூதர்களும், பாலஸ்தீனர்களும் எப்போதும் நடந்திராத அளவு கைகலப்புகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலைமை பாலஸ்தீன – அராபியக் கட்சிகள் அரசாங்கமொன்றில் இணைவதற்கு பொருத்தமானதல்ல என்று இஸ்ராயேல் கட்சித் தலைவர் பென்னட் மன்சூர் அப்பாஸுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
அவ்விரு கட்சிகளும் யூதப் பழமைவாதிகளின் கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்தும் அரசமைக்க முடியாது. எனவே, அவர்கள் தம்மால் ஒரு அரசாங்கத்தை உண்டாக்க முடியாது என்று கைவிடலாம், அல்லது நத்தான்யாஹுவின் கட்சியுடன் சேர்ந்து ஒரு அரசை உண்டாக்கலாம் என்பதே தற்போதைய நிலைமை. அதற்கு விலையாக அவர்கள் கேட்பது நத்தான்யாஹு கட்சித் தலைமையிலிருந்து விலகவேண்டும் என்பதே. அப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்த நத்தான்யாஹூவின் கட்சியினர் தயாரா என்பது இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
இஸ்ராயேலின் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் நிலைப்பாட்டைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது தற்சமயம் என்ன ஆகுமென்பது பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது. “நத்தான்யாஹூவை மீண்டும் உயிர்த்தெழவைத்துவிட்டார்கள்,” என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் மீண்டும் யூதப் பழமைவாதிகளைச் சேர்த்துக்கொண்டு அரசமைப்பாரா அல்லது மீண்டும் தேர்தல் வருமா?
சாள்ஸ் ஜெ. போமன்