அரசியல் காலநிலை மாறுகிறது வெனிசூவேலாவில். இரு தரப்பாரும் பேச்சுவார்த்தைக்கு விரும்புகிறார்கள்.

நீண்ட காலமாகத் தமது நிலைப்பாட்டிலிருந்து தளராத வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடூரோவும் எதிர்க்கட்சித் தலைவர் குவெய்டோவும் பேச்சுவார்த்தைகளில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பங்குகொள்ள மறுத்து ஜனாதிபதி நிக்கொலாஸ் மடூரோவை “சர்வாதிகாரி” என்று குறிப்பிட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் யுவான் குவெய்டோ சில நாட்களுக்கு முன்னர் தான் நாட்டின் ஆளும் சோஷலிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாரென்று அறிவித்திருந்தார்.

“அப்படியா, குவெய்டோ என்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போகிறாரா? ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்குமோ, அல்லது அமெரிக்காவிடமிருந்து அவருக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறதா?” என்று நாட்டின் தொலைக்காட்சி உரை ஒன்றில் ஏளனமாகக் கேட்டாலும் தானும் பேச்சுவார்த்தைக்குத் தயாரென்கிறார் மடூரோ.

தொடர்ந்து பேசிய மடூரோ முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய நாடுகளான நோர்வே போன்றவை பங்குபற்றத் தயாராக இருப்பின் தானும் அதற்கு விருப்பப்படுவதாகச் சுட்டிக் காட்டினார். 

தனது முன்னைய நிலைப்பாட்டை முழுவதுமாகக் கைவிட்டிருக்கும் குவெய்டோ வெனிசுவேலாவின் அரசு ஜனநாயகக் கோட்டுப்பாடுகளுடனான பொதுத் தேர்தல்களை ஒழுங்குசெய்யும் ஒரு எதிர்காலத் திட்டத்தைக் காட்டுமானால் நாட்டின் மீதான கட்டுப்பாடுகளைப் படிப்படியாகச் சர்வதேசம் கைவிடவேண்டும் என்கிறார். மடூரோ சிறையில் போட்டிருக்கும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களையும் விடுதலை செய்யவேண்டுமென்று குவெய்டோ கோருகிறார்.

முன்னர் குவெய்டோவை வெனிசூவேலாவின் சட்டபூர்வமான ஜனாதிபதி என்று ஏற்றுக்கொண்டிருந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் அந்த நிலைப்பாட்டைச் சமீபத்தில் கைவிட்டுவிட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கூட அவ்வழிக்கு மாறிவிட்டன. இது குவெய்டோவின் பலத்தைக் குறைத்துவிட்டிருக்கிறது. அதுவே அவரது நிலைப்பாட்டு மாற்றத்துக்கும் காரணமாக இருக்கலாம்.

அதேசமயம் வெனிசுவேலாவில் புதிய தேர்தல் ஆணையாளர்கள் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அதில் எதிர்க்கட்சிகளுக்கு மிகக் குறைந்த ஆசனங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் குழுவினர் நாட்டில் நகரபிதாக்கள், ஆளுனர்களுக்கான தேர்தல்கள் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *