சர்வதேச ஊடகங்களுக்கு வேண்டுமென்றே திசைதிருப்பும் செய்தியை அனுப்பி ஹமாஸ் இயக்கத்தினரை ஏமாற்றியதா இஸ்ராயேல் இராணுவம்?
வெள்ளியன்று இரவு இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊடகங்களுக்கு, தமது விமானங்களுடைய ஆதரவுடன் காஸாவுக்குள் காலாட்படை நுழைந்திருப்பதாகச் செய்தியொன்றை வட்ஸப்பில் அனுப்பிவைத்தது. அச்செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் உண்மையா என்று விசாரித்தபோது ஏற்றுக்கொள்ளவும் செய்தது.
வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிந்த செய்தி தமக்கு வரவில்லையே என்று அதுபற்றி விசாரித்த இஸ்ராயேல் ஊடகங்கள் இஸ்ராயேல் இராணுவம் காஸாவுக்கு உள்ளே நுழையவில்லை என்று தெரிந்துகொண்டன. அதே செய்தியைப் பின்னர் இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து, வெளிநாட்டு ஊடகங்களிடம் தவறான செய்தியைத் தெரிவித்ததுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
மேற்கண்ட திசைதிருப்பலை இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சு வேண்டுமென்றே செய்ததாகத் தெரியவருகிறது. அந்தச் செய்தியின் மூலமாக ஹமாஸ் போராளிகளை அதிகளவில் காஸாவுக்குக் கீழே அவர்கள் உண்டாக்கியிருக்கும் குகைகளுக்குள் இழுக்கவே அந்தத் தந்திரம் செய்யப்பட்டது. அக்குகைகளின் அமைப்புகளை இஸ்ராயேல் எப்பொழுதுமே கண்காணித்து வருகிறது.
பாளாளக் குகை வழிக்குள் நுழைந்த ஹமாஸ் போராளிகள் பலரைக் குகையைக் குறிவைத்துத் தாக்கிய இஸ்ராயேல் விமானங்கள் கொன்றதாகத் தெரிகிறது. இஸ்ராயேலின் 160 விமானங்கள் ஹமாஸின் பாதாளக் குகைகளைத் வெள்ளியன்று இரவு தாக்கியிருக்கின்றன. அதற்குள் அகப்பட்டுக்கொண்ட பல முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டதாக சனியன்று காலை இஸ்ராயேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆறாவது நாளாகத் தொடர்ந்தும் ஹமாஸுக்கும் இஸ்ராயேல் இராணுவத்துக்குமான போர் தொடர்கிறது. அதேபோலவே இஸ்ராயேலுக்குள் பாலஸ்தீனர்கள் – யூத பழமைவாதிகளுக்குமான கலவரங்களும் தொடருகின்றன. 31 பிள்ளைகள், 20 பெண்கள் உட்பட சுமார் 130 பேர் காஸாவுக்குள் இறந்ததாகத் தெரியப்படுத்தப்படுகிறது.
போர்த்தந்திரத்துக்காகத் திசைதிருப்பும் செய்திகளை வெவ்வேறு ஊடகங்களுக்குக் கொடுப்பதை எதிர்த்து இஸ்ராயேல் ஊடகங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைச்சை விமர்சிக்கின்றன. அப்படியான நடவடிக்கைகள் இஸ்ராயேலுக்கும் சர்வதேச ஊடகங்களுக்குமிருக்கும் உறவில் மேலும் விரிசல்களையே உண்டாக்கும் என்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்