இஸ்ராயேலில் யூதர்களின் இன்னொரு பெருநாள், இன்னுமொரு விபத்தில் இருவர் இறப்பு.
ஷௌவோத் பெருநாளைத் தமது சினகூகா ஒன்றில் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள் இஸ்ராயேல் யூதர்கள். அந்தத் தேவாலயத்தில் அவர்கள் கூடியிருந்த மேடையொன்று உடைந்து விழுந்து இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள் சுமார் 150 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் பத்துப் பேர் கடுமையாகக் காயமடைந்திருக்கிறார்கள்.
ஷௌவோத் பெருநாள் பாஸ்கு பண்டிகை கழிந்து ஏழு வாரங்களின் [50 நாட்கள்] பின்பு கொண்டாடப்படுகிறது. இதன் கொண்டாட்டம் இரண்டு நாட்கள் நடப்பதுண்டு. இதை ஆங்கிலத்தில் பெந்தகோஸ்த் என்றழைப்பார்கள். அறுவடைத் திருநாளாக ஆரம்பகாலத்தில் இருந்த இப்பெருநாளில் தேவாலையங்களை சோடித்து உணவு வகைகளைப் பகிர்ந்துண்டு கொண்டாடுவார்கள் யூதர்கள்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு யூதர்களின் புனிதரென்று கருதப்படுபவரொருவரைக் கொண்டாடியபோது அங்கிருந்தவர்கள் நெருக்கியடித்ததால் சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள்.
கிவாத் சேவ் என்ற அந்தத் தேவாலயத்தில் சுமார் 650 பேர் கொண்டாட வந்திருக்கிறார்கள். கட்டடமோ கொண்டாட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாக அவசர அவசரமாகத் பாவிப்புக்கு எடுக்கப்பட்டிருந்தது. கொண்டாடும் சமயத்திலும் ஒரு பக்கமாகக் கட்டட வேலைகள் நடந்துகொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.
அந்தக் கட்டடத்தில் கொண்டாடுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. நகரின் கட்டட அனுமதிப்பு சேவையினர் அதைப் பார்வையிட்டபோது அங்கே கட்டுவேலைகளில் தவறுகள் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் அதற்குப் பொறுப்புள்ளவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலீஸ் அதிகாரம் தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்