எண்பது மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை அமெரிக்கா தேவைப்படும் நாடுகளுக்கும் வழங்கும் என்கிறார் ஜோ பைடன்.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் திட்டம் மிகப் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறது. அதன் முக்கிய காரணம் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்காக இந்தியாவின் செரும் இன்ஸ்ட்டிடியூட்டின் தயாரிப்பை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு அது கிடைக்காது என்பதாலாகும். கொரோனாத் தொற்றுக்களால் உலகில் சமீபத்தில் படு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா தனது தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியிருக்கிறது.
செரும் இன்ஸ்ட்டிடியூட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 140 மில்லியன்களை கொவக்ஸ் திட்டத்துக்காக மே மாதத்தில் கொடுப்பதாக முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அவைகளனைத்தும் இந்தியாவுக்குள்ளேயே பயன்படுத்தப்படும். இந்தியாவில் 25 மில்லியன் பேருக்கும் அதிகமாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுத் தினசரி உத்தியோகபூர்வமான இறப்புத் தொகை 4,000 ஐ தாண்டியிருக்கிறது.
அத்துடன் தயாரிப்புகளிலும் செரும் இன்ஸ்ட்டிடியூட் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்த நிலைமையில் இந்தியாவின் தடுப்பு மருந்துகளை எதிர்பார்த்திருந்த நாடுகளான பங்களாதேஷ், சிறீலங்கா, நேபாளம் போன்ற நாடுகளே தமக்குத் தேவைக்காக சீனாவிடம் தடுப்பு மருந்துகளை வாங்க முடிவுசெய்திருக்கின்றன.
நிலைமையை மிகவும் கடுமையாக வார்த்தைகளா விமர்சித்து வருகிறார் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் கப்ரியேசுஸ், உலகின் வறிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்காத நிலையில் வளமான நாடுகள் தமது வயது வந்த குடிகளுக்கு மட்டுமன்றி, பதின்ம வயதினருக்கும் தடுப்பூசிகளைக் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதையும் அவர் சாடி, வளமான நாடுகள் அவைகளை வசதியற்ற நாடுகளுக்குக் கொடுக்கவேண்டுமென்று விண்ணப்பித்திருந்தார்.
இச்சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் தமது மக்களில் 30 % பேருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிட்டது. அத்துடன் மேலும் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் செய்திருக்கிறது. மேலும் அஸ்ரா செனகாவின் பாவிக்கப்படாத சில மில்லியன் தடுப்பு மருந்துகளும் ஒன்றிய நாடுகளின் கைவசமிருக்கிறது. அவைகளை ஒன்றிய நாடுகள் தமது பக்கத்திலிருந்தும், ஒன்றியத்தின் மூலம் மேலும் பல மில்லியன் தடுப்பு மருந்துகளையும் கொவக்ஸ் திட்டத்துக்குக் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
அமெரிக்கா தனது குடிமக்களில் 119 மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளைக் கொடுத்திருக்கிறது. நாட்டின் பாதிக் குடிமக்கள் ஒரு தடுப்பு மருந்தையாவது ஏற்கனவே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் பாவிக்காத அமெரிக்காவிடம் 60 மில்லியன் தடுப்பு மருந்துகள் கைவசமிருக்கின்றன. அத்துடன் மேலும் 20 மில்லியன் பைசர் பயோன்டெக் தடுப்பு மருந்துகளையும் கொவக்ஸ் திட்டத்துக்குக் கொடுப்பதாக ஜோ பைடன் உறுதிகூறியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்