லொட் நகரில் எரிக்கப்பட்ட சினகூகுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலின் அராபியக் கட்சித் தலைவர் பதவி விலகக் கோரிக்கை.
காஸா – இஸ்ராயேல் போர்ச் சமயத்தில் இஸ்ராயேலுக்குள் எழுந்த யூத – அராபியக் கலவரங்களில் இரு பகுதியினரும் எதிர்ப்பகுதியினருக்குப் பல சேதங்களை உண்டாக்கினார்கள். யூத – அராபியக் கைகலப்புக்கள், வன்முறைகள் என்றுமில்லாத அளவுக்கு உண்டாகின. அச்சமயத்தில் கடந்த வாரம் டொத் நகரிலிருக்கும் சினகூகுக்கு நெருப்புவைக்கப்பட்டது.
லொத் நகர்க் கலவரங்களில் ஒரு அராபியரும், ஒரு இஸ்ராயேலியரும் கொல்லப்பட்டார்கள். சினகூக் எரிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரி யூதர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவிக்க இஸ்ராயேலிய அராபியக் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் எரிக்கப்பட்டிருந்த சினகூகுக்குச் சென்றிருந்தார். அந்த நகரின் நகரபிதாவையும் சந்தித்தார். “புனிதமான இடங்களை அழிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. உண்மையான முஸ்லீம்கள் இப்படிச் செய்யமாட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலைத் தாக்கும் போது உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ அதேபோலவே அவர்களும் இதனால் கொதித்தெழுவார்கள்,” என்றும் மன்சூர் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.
அதன் விளைவாக இஸ்ராயேல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மன்சூர் அப்பாஸைப் பதவி விலகும்படி அவரது கட்சிக்காரர்கள் கோருகிறார்கள். நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்க எந்தக் கட்சியாலும் முடியாமலிருக்கும் நிலைமையில் நத்தான்யாஹுவின் அரசு மீண்டும் ஏற்படாமலிருக்க எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க மன்சூர் அப்பாஸ் ஆதரவளித்திருந்தார். கலவரங்களின் பின்னர் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்