இஸ்ராயேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்படவேண்டுமென்று கோர மறுக்கும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஹங்கேரி.
வெவ்வேறு உலக நாடுகள் தத்தம் முயற்சிகளாலும் போர்நிறுத்தத்தை இஸ்ராயேல் – ஹமாஸ் போருக்கிடையே கோரி வருகின்றன. ஏற்கனவே 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையும் மூன்று தடவைகள் கூடி ஒற்றுமையான அறிக்கையொன்றில் ஒன்றுபடமுடியாதிருக்கிறது. அதே காரணத்துக்காகச் செவ்வாயன்று கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்தவர்களில் ஹங்கேரி மட்டும் போர் நிறுத்ததுக்கான அறிக்கை வரிகளை ஏற்றுகொள்ளவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் காரியதரிசி ஜோசப் பொரலின் கருத்துக்கு ஒத்துக்கொள்ளாத ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஸியார்ட்டோ “இஸ்ராயேல் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சுட்டிக்காட்டலை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு பகுதிகளுமே உக்கிரமாக மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எவ்வித தீர்வுகளுமில்லாத போர்நிறுத்தம் எந்தவிதப் பலனையும் அளிக்காது, என்றார்.
பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர், “இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் போர் பக்கத்து நாடுகளுக்கும் பரவும் அபாயமிருக்கிறது. எனவே நாம் அமைதியை நிலை நாட்டக் கடுமையான முயற்சிகளை எடுக்கவேண்டும்,” என்றார்.
சாள்ஸ் ஜெ.போமன்