கிரேக்க அகதிகள் முகாம்களைச் சுற்றி 3 மீற்றர் உயரமான பாதுகாப்பு மதில்கள் எழுப்பப்படுகின்றன.

முகாம்களில் வாழும் அகதிகளுடைய பாதுகாப்பை அதிகரிப்பதாகக் குறிப்பிட்டு கிரீஸ் தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களைச் சுற்றிவர உயர்ந்த மதில்களைக் கட்டி வருகிறது. முக்கியமாக கிரீஸின் தீவுகள் அல்லாத நிலத்தொடர்புள்ள பகுதிகளிலேயே இத்தகைய மதில்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

ஆறு மாதத்துக்குள் கிரீஸுக்குள் அகதிகளாக வருபவர்களுடைய விண்ணப்பங்களைப் பரிசோதித்து விடையளிப்பதாகக் கூறினாலும் உண்மையில் அது நிறைவேறுவதில்லை. வருடங்களாகப் பலரும் தமக்குக் கொடுக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். அதனால் அகதிகள் முகாம்களை அடுத்து சகலவிதமான தேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியவிதமாக வர்த்தக சேவைகள் ஆரம்பித்து விடுகின்றன. 

அது மட்டுமன்றி பல குற்றங்களும் அகதிகள் முகாம்களுக்குள்ளும், அதைச் சுற்றிவரவும் நடக்கின்றன. அதன் விளைவாக சுற்றிவர இருக்கும் சமூகங்களில் வாழ்பவர்களுக்கு அகதிகளுடன் மனக்கசப்புகள் உண்டாகுவது வழக்கமாகிவிடுகிறது. ஆரம்பத்தில் அகதிகளுக்கு உதவி செய்பவர்களாக இருக்கும் சமூகத்தினர் படிப்படியாக அகதிகள் முகாம்கள் அங்கிருந்து அகற்றப்படவேண்டுமென்று கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 

அதனால் கைகலப்புக்கள், கலவரங்கள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அகதிகள் முகாம்கள் குடும்பங்கள் வாழ்பவை, ஒற்றையானவர்கள் வாழ்பவை என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. தனித்தனியாக வாழ்பவர்கள் வசிக்கும் பல முகாம்களில் குற்றங்களில் அளவு மிகவும் வேகமாக அதிகரித்து வருவதை நீண்ட காலமாகவே கிரேக்கர்கள் கவனித்து வருகிறார்கள். பொதுவாகவே கிரீஸில் அகதிகளை வரவேற்பதற்கான சுமுகமான காலநிலை இல்லாமல் போயிருப்பதால் கடுமையான எல்லைப் பாதுகாப்புக்களாலும், அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்களைக் குறைப்பதாலும் மக்களைத் திருப்திப்படுத்த முயல்கிறார்கள். 

தற்போதைய நிலையில் குடும்பங்கள் வாழும் அகதிகள் முகாம்களில் அவர்களுக்கான பாதுகாப்புக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டு எழுப்பப்படும் மதில்களை அங்கே வாழ்பவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தம்மிஷ்டப்படி வெளியே போய்வரலாம் என்று குறிப்பிடும் கிரேக்க அரசு உள்ளே வருபவர்கள் யாரென்று அறிந்துகொள்ள அங்கே வசிப்பவர்களுக்கு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்போவதாகக் குறிப்பிடுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *