பிரான்ஸின் நகரங்களுக்கு இடையே படுக்கை வசதியுடன் இரவு ரயில்கள் பிரதமர் மீண்டும் தொடக்கி வைத்தார்

சூழலை மோசமாகப் பாதிக்கின்ற உள்ளூர் விமான சேவைகளை விரைவில் குறைக்கவிருக்கிறது பிரான்ஸ்.அதற்குப்பதிலாக நகரங்கள் இடையே ரயில் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாரிஸில் இருந்து நாட்டின் தெற்கே நீஸ்நகரத்துக்கான இரவு ரயில் சேவையைபிரதமர் ஜீன் காஸ்ரோ ஆரம்பித்து வைத்தார்.இரவுப் பயணத்துக்கு ஏற்றவாறு படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட அந்த ரயில் பாரிஸ் Austerlitz நிலையத்தில் இருந்துநேற்று வியாழக்கிழமை இரவு எட்டு மணிக்குப் பின்( 20:52) முதல் பயணத் தைத் தொடக்கியது. அது பிரபல கடற்கரையோர நீஸ் (Nice) நகரத்தை இன்று காலை ஒன்பது(09:11) மணிக்குச் சென்றடைந்தது.

12 மணி நேர இரவுப் பயணத்தை ஆரம்பித்து வைத்த பிரதமர் ஜீன் காஸ்ரோ, அந்த ரயிலில் இரவைக் கழித்து நீஸ் நகர் சென்றடைந்தார் என்றுசெய்திகள் வெளியாகி உள்ளன.

முதல் நாள் சேவையில் 200 பேர்வரைபயணம் செய்தனர். சாதாரண சாய்வு இருக்கைக்கு 19 ஈரோக்களும் இரண்டாம்வகுப்பு படுக்கை ஆசனத்துக்கு (second class berth)29 ஈரோக்களும் முதல் வகுப்பு படுக்கைக்கு(first berth) 39 ஈரோக்களும் கட்டணமாக அறவிடப்பட்டிருந்தன. புதிய இரவு சேவைக்கு “France Relance” என்றுபெயர் சூட்டப்பட்டுள்ளது.

“நீல ரயில்”(“Train bleu”) என்னும் பெயரில் முன்னர் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுவந்த இரவு ரயில்கள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப் பட்டிருந்தன. நகரங்களிடையே குறுகிய நேரப் பயணங்களுக்காகப் பயணிகள் உள்ளூர் விமான சேவைகளில் ஆர்வம் காட்டியதால் ரயில் சேவைகளை நிறுத்தும் நிலைமை ஏற்பட்டது.

தற்சமயம் நகரங்களுக்கு இடையே இரவுப் பயணத்துக்கான ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக அரசு 100 மில்லியன் ஈரோக்களை ஒதுக்கி உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்கு முன்னராக ஜரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கு இடையிலும் இரவு ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன. ரயில்களில் இரண்டரை மணி நேரத்தில் கடந்துவிடக் கூடிய தூரங்களுக்கு இடையிலான உள்ளூர் விமான சேவைகளை ‘ஏயார் பிரான்ஸ்’ நிறுவனம் விரைவில் நிறுத்த உள்ளது. அதனால் ஏற்படும் வருமான இழப்பை அரசு ஈடுசெய்ய வுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *