மக்ரோன் ஞாயிறன்று தேர்தலில் வென்றால் மந்திரிசபையில் சகலரும் ராஜினாமா செய்வர் என்கிறார் பிரதமர்.

பிரான்சில் ஞாயிறன்று நடக்கவிருக்கும் இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் பதவியிலிருக்கும் இம்மானுவேல் மக்ரோனுடன் மோதுகிறார் வலதுசாரியும் தேசியவாதியுமான மரின் லு பென். நாட்டை எப்படி ஆள்வது என்பதில் மிகவும் முரண்பாடான கோட்பாடுகளைக் கொண்ட இவ்விருவரிடையே மக்ரோனே வெல்வார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. மக்ரோன் வெற்றிபெறும் பட்சத்தில் தானும் தனது மந்திரி சபையும் தமது ராஜினாமாக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவிருப்பதாகப் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்திருக்கிறார். 

“புதிய ஜனாதிபதிக்காலம் ஆரம்பிக்கும்போது நாட்டின் அரசியலில் ஒரு புதிய உத்வேகம் தேவை. அதற்காகவே நாம் எங்கள் பதவிகளிலிருந்து விலகுவோம்,” என்று பிரதமர் தெரிவித்தார். புதிய பிரதமராக ஐரோப்பிய மத்திய வங்கியின் தற்போதைய தலைவரான கிரிஸ்டின் லகார்ட் பதவியேற்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தல் கணிப்புக்களின்படி 2017 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை விட நெருக்கமான மோதல் இரண்டு வேட்பாளர்களுக்குமிடையே நிலவி வருகின்றது. 53 – 56 % வாக்குகளை மக்ரோன் பெறுவார் என்றும் 44 – 47 % வாக்குகளை லி பென் பெறலாம் என்றும் அவை குறிப்பிடுகின்றன.

இவ்விரு வேட்பாளர்களும் மட்டுமே இறுதிச் சுற்றுக்குச் சென்றமை நாட்டின் இடதுசாரிகளையும், சூழல் பேணும் இயக்கத்தினரையும் பெரிதும் அதிருப்திக்கு உண்டாக்கியிருக்கின்றன. பெரும்பாலும் இளவயதினரான அந்த வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் அல்லது வாக்குச்சாவடியையே புறக்கணிப்பார்களா என்பது தேர்தலின் முடிவை நிர்ணயிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

தேர்தலைப் புறக்கணிப்பவர்கள் பெரும்பாலானோராக இருக்கும் பட்சத்தில் அது மக்ரோனின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கலாம் என்பது பலரின் கருத்து. 

“தேர்தல்கள மோதல் இன்னும் முடியவில்லை. அதற்கு முன்னர் நாம் எதிலும் நிச்சயமாக இருக்கமுடியாது. மக்ரோன் பிரான்ஸ் நாட்டுக்காக வைத்திருக்கும் அரசியல் திட்டங்களே நாட்டு மக்களுக்குச் சாதகமானது என்பதை நாம் வாக்காளருக்குத் தெரியப்படுத்தவேண்டும்,” என்கிறார் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்.

அவரைப் பொறுத்தவரி ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் மக்ரோனின் கோட்பாடுகளுக்கு முக்கியமான ஒரு பரிசோதனையாகும். பிரெஞ்ச் மக்களின் வேலைக்காலத்தை நீட்டுவது உட்பட்ட பல மக்ரோன் – திட்டங்களை நிறைவேற்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமன்றி பாராளுமன்றத் தேர்தலிலும் இதே கட்சி மக்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *