பின்லாந்தின் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிற இரண்டு பிரிட்டர்களில் ஒருவர் இந்தியப் பின்னணியுள்ளவர்.
சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகிய இருவருக்கும் சர்வதேசப் பெருமையுள்ள தொழில்நுட்பப் பரிசு வழங்கப்படுகிறது. பின்லாந்தின் டெக்னிக் அக்கடமியால் 2004 ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கொருமுறை கொடுக்கப்படும் இப்பரிசு மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அதேசமயம் சூழலுக்குப் பங்கமேற்படுத்தாமலும் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
கடந்த வருடம் கொடுக்கப்படவேண்டிய பரிசு கொரோனாத் தொற்றுக்களினால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மில்லியன் எவ்ரோ பரிசுத் தொகையைப் பெறும் சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகியோர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களாகும்.
மலிவாகவும், வேகமாகவும், மரபணுக்களைப் பெருமளவில் வரிசையாக கணிக்கக்கூடிய தொழில் நுட்பத்தை இவ்விரண்டு ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏற்கனவே பரந்த அளவில் அம்முறை பாவிப்புக்கு வந்திருக்கிறது.
ஒரு மனிதரில் 20,000 – 25,000 மரபணுக்கள் இருக்கின்றன. 2000 ம் ஆண்டில் கூட ஒரு மனிதரின் மரபணுவின் பின்னணியை முழுவதுமாக ஆராயப் பத்து வருடங்களும், ஒரு பில்லியன் எவ்ரோக்களும் செலவாகியிருக்கிறது. ஆனால், இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் வழியால் ஓரிரு நூறு எவ்ரோக்களும், ஒரு சில மணித்தியாலங்களும் போதுமானதாகியிருக்கிறது.
உலகின் பல நாடுகளிலும் கொரோனாக் கிருமிகளின் மரபணுவை வரிசையாகப் பின்னோக்கிப் பார்ப்பதற்கு இவர்களுடைய தொழில்நுட்பத் தீர்வுதான் பாவனையிலிருக்கிறது. அதன் மூலம் தான் கொரோனாத் தொற்றுக்களை எதிர்க்கும் தடுப்பு மருந்து மிகவும் வேகமாகக் கண்டுபிடிக்கப்பட முடியுமாகியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்