ஜி 7 நாடுகளின் மாநாட்டில் இனிமேல் நிலக்கரிச்சக்தியில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது

நிலக்கரியை எரிப்பதனால் வரும் சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சார நிலையங்களுக்கான அரச முதலீடுகளை நிறுத்துவதாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் முடிவு செய்திருக்கின்றன. அடுத்த பிரிட்டனில் நடக்கவிருக்கும் அந்த நாடுகளின் மாநாட்டுக்கு முன்னர் இந்த விடயம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

2050ம் ஆண்டுக்கு முதல் பூமி 1.5 செல்ஸியஸுக்கு அதிகமாக வெம்மையடையுமானால் ஏற்படப்போகும் காலநிலை மாற்றங்களின் விளைவுகள் மக்களால் தாங்கமுடியாதிருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். அந்த எல்லையைத் தாண்டாமலிருக்கவேண்டுமானால் உலகின் வெம்மையைக் கூட்டும் நடத்தைகளில் ஈடுபடுவதை மனிதர்கள் நிறுத்தவேண்டும். நிலக்கரியை எரிப்பதனால் உண்டாகும் விளைவுகள் உலகின் வெம்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிப்பதனால் அப்படியான மின்சார நிலையங்களில் முதலீடு செய்வதை, விஸ்தரிப்பதை உலக நாடுகள் நிறுத்தவேண்டுமென்ற கோரிக்கை கடுமையாக எழுப்பப்பட்டு வருகிறது.  

அப்படியான முதலீடுகள் பெரும்பாலும் நாடுகளின் அரசாங்கங்களாலேயே செய்யப்படுவதால் அவற்றை நிறுத்துவதன் மூலம், தனியார் நிறுவனங்களும், வங்கிகளும் அதை நிறுத்தும்படி செய்வதே இந்த முடிவின் நோக்கமாகும். சமீபத்தில் உலகின் முக்கிய முதலீட்டு வங்கிகளும் நிலக்கரி முதலீடுகளில் ஈடுபடுவதில்லையென்று முடிவெடுத்திருக்கின்றன.

அமெரிக்கா, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஜி 7 அமைப்பின் நாடுகள் தனியார் வாகனங்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய இடம் வகிக்கின்றன. அவைகளிலும் பெற்றோல் போன்ற எரிபொருட்களைப் பாவிப்பை நிறுத்தி விரைவில் மின்சாரக் கல வாகனத் தயாரிப்புக்களில் மட்டும் ஈடுபடவும் இந்த நாடுகள் தமது நாட்டு நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன. 

இவ்வருடம் நவம்பரில் கிளாஸ்கோவில் நடக்கவிருக்கும் COP26 என்ற ஐ.நா-வின் உலக காலநிலை மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அலொக் ஷர்மா,”நிலக்கரிச் சக்தியைத் தொடர்ந்தும் பாவிப்பது நிறுத்தப்படவேண்டும்,” என்று உலக நாடுகளுக்கு அறிவிக்கும் முக்கிய முடிவு இதுவாகும் என்று குறிப்பிட்டார்.

நிலக்கரிப் பாவிப்பில் முதலிடத்திலிருக்கும் சீனா, மூன்றாமிடத்திலிருக்கும் இந்தியா ஆகிய நாடுகளோ அதன் பாவிப்பை நிறுத்துவது பற்றி முடிவெடுக்காததுடன் தொடர்ந்தும் அவ்வகையான முதலீடுகள் செய்வது பற்றி அறிவித்திருக்கின்றன. அதேபோலவே ரஷ்யாவும் நிலக்கரியைப் பாவிப்பதில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *